தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்றே கூறவேண்டும்.
நாளுக்கு நாள் தமிழக அரசியல் பரபரப்புடனேயே நகர்ந்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தின் இரு பிரதான அரசியல் கட்சிகளில் ஏற்பட்ட தலைமைத்துவ மாற்றமே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
தற்போது ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் பொது செயலாளராக வி.கே.சசிக்கலா அண்மையில் நியமிக்கப்பட்டார். எனினும், அவரின் நியமனத்திற்கு அந்த கட்சியின் அடிநிலைத் தொண்டர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அ.தி.மு.க கட்சி அடிநிலை தொண்டர்கள் பலரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், நாள்தோறும் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க., தொண்டர்கள், சென்னை, தி.நகரில் உள்ள தீபாவின் இல்லத்தை முற்றுகையிட்டு, அவரை தீவிர அரசியலில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தி.மு.க கட்சியின் செயல் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் மத்தியில் எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மு.க.ஸ்டாலினை வெறுக்கும் அவர்கள் தி.மு.க கட்சியில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தி.மு.க கட்சியில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை தடுக்கும் முயற்சியில் தி.மு.க கட்சி தீவிரமாக செயற்படுவதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், தி.மு.க கட்சி உறுப்பினர்களின் இந்த முடிவால் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருக்கும், அதே நேரத்தில் மன்னார்குடி தரப்பினருக்கு இது பேரிடியாக அமைந்துள்ளதாக அரசியல் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.