தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
அலங்காநல்லூரில் ஆரம்பித்த இந்த போராட்டம், கடந்த இரண்டு நாட்களாக சென்னை மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கில் ஒன்று குவிந்துள்ள மாணவர்கள், இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மேலும் தீவிரம் பெற்றுள்ளது.
குறிப்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும், பீட்டா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், லண்டனில் இந்திய தூதரக அலுவலகம் முன் திரண்ட லண்டன் வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாதைகளை கைகளில் ஏந்தி நின்ற ஆர்ப்பாட்டகாரர்கள், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரியம் அழிவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறிய அவர்கள், இதற்காக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் குரல் கொடுப்போம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.