இன்றைய தினம் தமிழர் பாரம்பரியத்தை காக்க போராட்டம் செய்து கொண்டிருக்கின்றான்.
ஒரு தரப்பினர் தமிழன் அடங்காதவன், திமிர் மிக்கவன் என்றும் கூட சொல்லுவார்கள். நன்று வாழ்த்துக்கள் அவர்களுக்கு வந்தாரை மட்டுமல்ல வைதாரையும் வாழ்த்துபவனே தமிழன்.
ஆம் தமிழன் திமிர் பிடித்தவன் தான், அடங்காதவன் தான் இவை அவன் சிறப்பினால், வீரத்தால் தானாக கிடைத்தது.
காரணம் அவன் மொழி தமிழ் “ஆம் செம்மொழியான தமிழ்”. அதன் காரணமாக அவன் திமிரோடு இருப்பதில் தவறில்லையே.
“தமிழ் எங்கள் மொழி.. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. செம்மொழியான தமிழ் மொழி என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்களுக்கு பஞ்சமில்லை.
இதில் இரண்டு ரகங்கள் உண்டு ஒன்று தற்பெருமைக்காக அதாவது நவநாகரீகத்திற்காக நான் தமிழன் என்று சொல்லும் பலரை சிறப்பாக விரல்விட்டே எண்ணி விடலாம். அவ்வாறானவர்கள் கட்டாயம் இதனை படியுங்கள்.
இரண்டாவது உண்மையாகவே தமிழன், செம்மொழி தமிழ் மொழி என்பதையிட்டு பெருமைப்படும் தமிழர்கள் உலகம் முழுதும் சிதறிக்கிடக்கின்றார்கள். இவர்கள் பெருமையோடு இதனைப் படியுங்கள்.
தமிழ் செம்மொழிதான் எந்த வித மாற்றமும் இல்லை ஆனாலும் நம்மில் எத்தனைப் பேருக்கு ஏன் செம்மொழி என தமிழ் மொழிக்கு பட்டம் பெயர் வந்தது என்பது தெரியும்??
செம்மொழியான நம் தமிழ் மொழிக்கு, ஞால முதல் மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான சிறந்த இலக்கியச் செல்வங்களைக் கொண்ட மொழி, இன்று வரை வழக்கில் உள்ள மொழி.,
இவ்வாறு பல சிறப்புக்களையும் கொண்ட மொழி தமிழ். சிறப்பு மிக்க மொழிக்கு “செம்மொழி” என்னும் தகுதி கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை.
செம்மொழிக்கான தகுதிகள் வேண்டும் அவை இருப்பின் மட்டுமே செம்மொழி என ஓர் மொழியை ஏற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் தமிழுக்கு தகுதிக்கும் சிறப்புக்கும் பஞ்சம் இல்லை.,
இரு வகையில் செம்மொழிக்கான தகுதிகள் கூறப்படும், செம்மொழி என்னும் தகுதி வழங்கும் வல்லுநர் குழுவினர்,
அ. மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற வரலாறு கொண்ட மொழி.
ஆ. அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய நூல்கள்.
இ. அம்மொழிக்கே உரியதாகவும் ,மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.
ஆகியன செம்மொழியின் தகுதிகள் என வல்லுநர் குழுவினர் வரையறை செய்துள்ளனர்.
இந்த வரையறைகளுக்கும் மேலாக சிறப்புகளைப் பெற்றுத் தன்னிகரற்று விளங்கும் ஓர் மொழியாக தமிழ் மொழி காணப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வல்லுநர்களின் அறிவை தாண்டி நிற்கின்றது தமிழ்.
அடுத்ததாக செம்மைப் பண்பு. செம்மொழிக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளாக 11 பண்புகள் வரையறை செய்யப்படுகின்றன.
- தொன்மை
- தனித்தன்மை
- பொதுமைப் பண்பு
- நடுவுநிலைமை
- தாய்மைப் பண்பு
- பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
- பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
- இலக்கிய வளம்
- உயர் சிந்தனை
- கலை இலக்கியத் தனித்தன்மை
- மொழிக் கோட்பாடு
இந்த 11 பண்புகளும் செம்மொழிக்கான பண்புகளாகும். இந்த பண்புகள் அனைத்தும் தமிழ் மொழிக்கு இருக்கின்றது. அதன் காரணமாகவே செம் மொழி எனும் பட்டம் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டது அதனையிட்டு பெருமைப்படுவோம்.
அதனையும் தாண்டிச் சென்று பார்த்து, புலமையோடு தமிழின் சிறப்பை கூறும் போது .,
பல மொழிகளையும் கற்றறிந்து தமிழ் மொழியின் சிறப்பை ஆய்வு ரீதியாக எடுத்தியம்பிய தமிழறிஞர் மற்றும் சொல்லாராய்ச்சி வல்லுநர் மொழி ஞாயிறு பாவாணர் கூறும் தமிழின் செம்மைப் பண்புகளாக.,
- தொன்மை
- முன்மை
- எண்மை (எளிமை)
- ஒண்மை (ஒளிமை)
- இளமை
- வளமை
- தாய்மை
- தூய்மை
- செம்மை
- மும்மை
- இனிமை
- தனிமை
- பெருமை
- திருமை
- இயன்மை
- வியன்மை நிற்க அந்த வகையில் 11 அல்ல அதற்கும் மேற்பட்ட சிறப்புகளைக் கொண்டதே தமிழ்.
ஞாலத்தில் தோன்றிய மாந்தர்கள் முதலில் பேசிய மொழி தமிழ் . இதனை, தஞ்சைப் பெரும்புலவர். நீ. கந்தசாமி,
"வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக்
கையினா லுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலைக் கொண்டு பணிகுவாம்" என பெருமையுடன் கூறுகின்றார்.
வரலாறுகள் எரிக்கப்படட்டும் பரவாயில்லை.., தமிழர் பாரம்பரியத்தை அழிக்கட்டும் கலாச்சாரத்தை அழிக்க, அடக்க நினைக்கட்டும், அதுவும் நடக்கட்டும் பரவாயில்லை., தமிழர்களில் நக்கீரர்களுக்கு மட்டும் பஞ்சம் இல்லை. என்பதும் நினைவிருக்கட்டும்.
ஆனால் தமிழன் மொழியை அதன் சிறப்பை எவராலும் அழிக்க முடியாது. மூத்த மொழி மட்டுமல்ல தமிழ் முக்கிய மொழி தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும்.
இதனால் இப்போது சொல்லுவோம் செம்மொழியான தமிழ் மொழி வாழ்க ... தலை நிமிர்ந்து மார் தட்டிச் சொல்லடா நான் தமிழன் என்று..,