ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் பெற்றுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலங்காநல்லூரில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் தற்போது மத்திய, மாநில அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் மாறியுள்ளது.
அந்த வகையில், சென்னை மெரீனா கடற்கரையில் இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் மாணவர்கள் மிகவும் எழுச்சியுடன் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் திரைபிரபலங்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர்கள் அமைப்பு என பல தரப்பினரும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இன்றைய ஆரப்பாட்டத்தின் போது மனதை நெகிழ வைக்கும் விடயங்கள் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சிங்கபூரில் இருந்து பணம் அனுப்பிய இளைஞர், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டத்துக்கான தனக்கு கிடைத்த தொழிலை தூக்கியெறிந்த இளைஞன் குறித்த தகவல்கள் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெண்களுக்கு எதிராக எந்த ஒரு வன்முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது தமிழர்களின் கண்ணியத்தை எடுத்து காட்டியிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.