பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

Report Print Murali Murali in சிறப்பு
239Shares

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.

டாவோசில் கடந்த மாத நடுப்பகுதியில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இந்த மாநாட்டின் பக்க நி்கழ்வாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பங்கேற்ற இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்துக் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாக, கலந்தாய்வு செயலணியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை வரவேற்றுள்ளார்.

“அதேவேளை, பல்வேறு விடயங்களில், குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்களில் மெதுவான முன்னேற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளமை குறித்த எனது கவலையை வெளியிட்டேன்.

இதுவும், கரிசனைக்குரிய ஏனைய விவகாரங்களும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் நான் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் சிறிலங்கா பிரதமருக்குத் தெரிவித்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

- Puthinappalakai

Comments