தருமனோ பாண்டவரோ வீழவில்லை : சூது அறிந்திருந்தால் நாடு இழந்த வனவாசம் வருமா?

Report Print Mawali Analan in சிறப்பு

கேள்விகளை பிறப்பிக்காத படைப்பு நல்லதோர் படைப்பாக அமையாது என்பது பாரத யுத்தம் தொடர்பில் இன்றும் பலருக்கு எழும் கேள்விகள் ஊடாக மெய்ப்பிக்கப்படும்.

எதிர்காலத்தை பிரதிபளிக்கும் கண்ணாடியே இதிகாசம். எப்போதோ நடந்த ஒன்று நிகழ்காலத்தில் நடப்பது போன்றே தோன்றும்.

அவ்வகையில் பாரதம் தொடர்பில் ஒரு சில கேள்விகள், அந்தக் கேள்விகளுக்கு அதிலிருந்தே விடை, அது நிகழ்காலத்தில் தொடர்பு படும் விதம் உங்களின் பார்வைக்கு ஓர் பதிவு.

பாண்டவர்களின் உற்ற நண்பனான எதிர்காலத்தையும் உணர்ந்த கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே தருமனின் சூதாட்டத்தை தடுத்திருக்கலாமே? ஏன் அப்படி செய்ய வில்லை?

அப்படி செய்யாத காரணத்தினால் நாடு இழந்தான் தருமன். உறவுகளை இழந்தான், சுற்றியுள்ள நண்பர்களை இழந்தான், யுத்தம் மூண்டது நண்பர்கள் பகைவர்கள் என அனைவரையும் தொலைத்தான்.

அங்கு சூதாடியது தருமனும், துரியோதனும் என்றால் இடை நடுவில் ஓர் சகுனி. சகுனிக்கு சாதூர்யம் கொடுத்தவனும் கிருஷ்ணன் தானே?

துரியோதனன் கூட ஒரு வகையில் நல்லவன் தான் ஆனால் சகுனிகளும், முதுகில் குத்துபவர்களையும் தருமனுக்கு காட்டியது அந்த சூதாட்டம் தானே?

அப்படி என்றால் கிருஷ்ணன் ஏன் அதனை தடுக்க வில்லை? ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் தருமன் ஒழியவும் நேராது, உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருக்காதே? இங்கு கிருஷ்னன் செய்தது சரியா? யுத்தம் மூண்டது எதனால்?

இந்தக் கேள்விக்கு பதில் உத்தவருக்கு கிருஷ்ணன் கூறும் ஆத்ம உபதேசத்தில் கிடைக்கும்.

அதாவது துரியோதனனுக்கு இருந்த விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான் என்றான் கண்ணன். “துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது. ஆனால், பணயம் வைக்க அவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தன அவை தவிர சுற்றிலும் படைகள் இருந்தன.

என் மாமா சகுனி, பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான் துரியோதனன் எதிரிகள் சூழ்ச்சி. ஒரு வகையில் தருமன் என்னை உள் வர விடாமல் கட்டு போட்டதால் தருமன் தோற்க சூழ்ச்சி வென்றது.

ஆனாலும் அதனாலேயே தருமன் தன் நிலையறிந்தான் படையறிந்தான். தருமத்தை வாழ வைக்க யுத்தம் அவசியமானது என்கின்றது கிருஷ்ணனின் பதில்.

பணமும், சூது சூழ்ச்சியும் சூழ்ந்திருந்தால் தருமனும் நிலைதடுமாற வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இறுதியில் அந்த தருமம் வெல்லும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்படுகின்றது.

அப்படி என்றால் ஆபத்துக்களில் உள்ளவர்களை தான் பரமாத்மா காப்பாற்றுவாரா? ஆரம்பத்திலேயே தடுத்தால் பிழையா? இங்கு பிழை யார் தருமனா? கண்ணனா? சகுனியா? துரியோதனனா?

மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. அதை நடத்துவதும் இல்லை கடவுள் அதில் குறுக்கிடுவதும் இல்லை. வெறும் ‘சாட்சி பூதம்’ கடவுள் நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவன் அதுதான் தெய்வ தர்மம் என்கின்றது கிருஷ்ணனின் பதில்.

எப்படியானாலும் யுத்தம் கூறிய பதில் கடைசியில் தருமம் வெற்றி பெற்றது என்பதே “தருமனின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்னர் தருமனே வென்றான் என்பதா?

பாரத யுத்தம் ஒரு வகையில் மிகப்பெரிய உண்மையை காட்டுகின்றது அதாவது. நேர்மை மிக்க ஓர் தலைவனை எத்தனை சூழ்ச்சிகள் சூழ்ந்தாலும் வீழ்த்த முடியாது.

உண்மையில் அந்த யுத்தம் மட்டும் நடக்காவிட்டால் தருமனுக்கு சுற்றி உள்ளவர்களைப் பற்றி தெரியாமல் போயிருக்கும். போர் தருமம் மீறி யுத்தம் செய்தும் வெல்லப் பார்த்தான் துரியோதனன்.

அதனால் இழப்பு ஏற்பட்டதே தவிர தருமனோ பாண்டவரோ வீழ வில்லை கடைசியில் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் அமைக்கப்பட்ட ஆட்சி பீடத்தில் சகுனிகள் குறைவு எதிரிகளும் குறைவு. அதனால் நீண்ட நாள் ஆண்டான் தருமன்.

காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று கூறுவதோடு எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, நடக்கப்போவதும் நன்மைக்கே என்கின்றது பாரத யுத்தத்தின் சாரம்.

இங்கு தருமன் சூதுகளை, சூழ்ச்சிகளை மட்டும் அறிந்திருந்தால் தோற்றிருக்க மாட்டான். வனவாசத்தில் மறைந்து வாழ வந்திருக்காது. யுத்தம் நேர்ந்திருக்காது ஆனால் அடிமையாக இருந்திருப்பார்கள் பாண்டவர்கள்.

யுத்தம் இல்லாத வரலாறே மாறியிருக்கும் என்பது மட்டும் உறுதி. ஆனால் அதன் இழப்புகளும் வலி வடுக்களும் அதிகம். பாரத யுத்தம் பாணியில் பார்த்தால் அதுவும் நன்மைக்கே என்கின்றான் கிருஷ்ணன்.

இது அந்த பாரத யுத்தத்திற்கு மட்டும் அல்ல மௌனித்த யுத்தத்திற்கும் பொருந்தும். எதிர்கால அரசுகளுக்கும் ஆட்சிகளுக்கும் ஓர் படிப்பினையே தருகின்றது பாரத யுத்தம். அவ்வகையில் தமிழனின் படைப்புகளும் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி.

Comments