எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் இலங்கை அகதிகள் குறித்து தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அதிகாரிகள் குழு ஒன்று ஹொங்கொங் நாட்டிற்கு சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், குறித்த இலங்கையர்களுக்கு ஹொங்கொங் பொலிஸார் போதிய பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான எட்வர்ட் ஸ்னோவ்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார்.
இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடைக்கலம் வழங்கிய ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டிருந்தன.
ஈழ அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களை விட, ஈழ அகதிகள் அதிக அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.