வித்தியாவுக்கு நீதி கிடைத்து இன்றுடன் ஒரு மாதம்! ஒரு மீள்பார்வை

Report Print Shalini in சிறப்பு
485Shares

கடந்த மாதம் 27ஆம் திகதி அதாவது, இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்கு முன் இன்றைய நாள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். அந்த தீர்ப்புக்காக இலங்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்கள் அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

யாழ். புங்குடுதீவில் மாணவி வித்தியாவை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள்தான் அது.

சாதிக்க வேண்டிய வயதில் சாகடிக்கப்பட்ட வித்தியாவுக்கு நீதி கிடைத்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிவிட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று 2 வருடங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒன்று.

அதிலும் வித்தியாவின் கொலையை விசாரிப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ட்யல் அட் பார் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் மூன்று மாதங்களில் வித்தியாவுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டது.

வித்தியா கொலை வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு முதலில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் 11ஆம் இலக்க சந்தேகநபர் அரசசாட்சியாக மாறியிருந்தார்.

இதன் அடிப்படையில் குறித்த நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. மிகுதியாக வித்தியா கொலையில் 9 சந்தேகநபர்கள் காணப்பட்டனர்.

வித்தியா கொலைவழக்கின் தீர்ப்பு 27ஆம் திகதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள், வித்தியாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைவரும் கூடியிருந்தார்கள்.

பொலிஸார் மற்றும் ஆயுதமேந்திய விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வித்தியா கொலையின் சந்தேகநபர்கள் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன்போது மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் ஏகமனதாக வித்தியா கொலையின் குற்றவாளிகளுக்க தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஏழு பேருக்கும் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 30,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தாருக்கு, குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, நீதிமன்றின் விளக்குகள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் மரணதண்டனை விதித்துள்ளது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் குற்றவாளிகளான,

2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,

3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,

4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,

5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,

6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,

8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,

9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கே மரணதன்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 1ஆவது மற்றும் 7ஆவது சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதியின் 3ஆம் மாடியில் கூடிய நீதாய விசாரணை மன்றின் நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோரினால் திறந்த நீதிமன்றத்தில் வைத்து இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மரணதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த அனைவருக்கும், வித்தியாவை பெற்ற தாயாருக்கும் இந்த தீர்ப்பு ஒரு மன அமைதியை கொடுத்தது.

தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதமே கடந்திருக்கின்றது. ஆனால் அதற்குள் கொலையாளிகளை காப்பாற்றுவதற்கு குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஒரு தமிழ் பெண்ணுக்கு நீதி கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. இந்த கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, இனி இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்பதற்கான ஒரு பாடமாக அமைய வேண்டும்.

வித்தியாவைப் போன்று பல பெண் பிள்ளைகளுக்கு அந்த மண்ணில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வழக்கு விசாரணைகளும் துரிதமாக நடைபெற்று அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.