ஹாட்லி கல்லூரி மாணவன் நிலைநாட்டிய புதிய சாதனை

Report Print Samy in சிறப்பு

ஹோமாகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் ஹாட்லி மாணவன் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் நிகழ்ச்சியில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.

இவர் தட்டெறிதல் போட்டியில் 53.23 மீற்றர் தூரம் எறிந்தே இந்த புதிய சாதனையை நிலைநாட்டினார்.

முன்னைய சாதனையைவிட இது 7 மீற்றர் அதிகமானதாகும்.

இதே போட்டியில் இவரது கல்லூரியைச் சேர்ந்த பிரேமகுமார் மிதுஷான் 43.43 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

புதனன்று நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் (13.41 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டிகளில் நேற்று பிற்பகல் 3.00 மணிவரை 14 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

முதலாம் நாளன்று 3 புதிய சாதனைகளும் நேற்றைய தினம் 11 சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன.

அண்மைக்காலமாக பாடசாலை மெய்வல்லுனர் அரங்கில் மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற யாழ். ஹார்ட்லி கல்லூரி மாணவர்களுக்கு 2013 முதல் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹரிஹரன், தனது மாணவர்களின் வெற்றி குறித்து கருத்து வெளியிடுகையில்,

தற்போது நடைபெற்று வருகின்ற ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் எமது பாடசாலையிலிருந்து 3 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் 5 பதக்கங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் நாம் களமிறங்கினோம்.

எனினும் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிதுன் ராஜ் 2 பதக்கங்களையும், மிதுஷான் ஒரு பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்து கொண்ட ரகுராஜா சன்ஜே, துரதிஷ்டவசமாக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழந்தார்.

நேற்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியில் மிதுன் ராஜ், புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெல்வார் எனவும், இவ்வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றுகொள்வார் எனவும் நான் அதிகம் நம்பியிருந்தேன்.

அதேபோல அவர் அந்த அனைத்து இலக்கையும் வெற்றிகொண்டதுடன், அவருடன் களமிறங்கிய எமது பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான மிதுஷானும் வெண்கலப் பதக்கத்தை வென்று எனக்கும், எமது பாடசாலைக்கும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தனர்.

உண்மையில் எமது பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

அத்துடன், மிதுன் ராஜின் இந்த சாதனை, இலங்கையில் உள்ள 16 வயதுக்குட்பட்ட தேசிய மட்ட வீரரொருவரின் சாதனையையும் முறியடித்திருக்கலாம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மிதுன் ராஜ், கலந்து கொள்ளவுள்ள ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்று போட்டியின் கடைசி நாளாகும்.

Latest Offers

loading...