கடற்புலி இந்துவின் தாயாரின் துயர நிலை! மனதை நெகிழச்செய்யும் பதிவுகள்

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் தமிழர்களையும், அவர்களின் வாழ்வியல் முறையினையும் முற்றிலுமாக அழித்து விட்டது என்றால் அது மிகையாகாது.

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், யுத்த வடுக்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. அவையனைத்தும் கடந்த காலத்தின் கொடூர தன்மையை வெளிக்காட்டி நிற்கின்றன.

இலங்கையில் யுத்தத்திற்கு முற்பட்ட காலப்பகுதியாக இருந்தாலும் சரி, யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் சரி தமிழர்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்தப்பட்டு தமது வாழ்க்கையை பெரும் போராட்டத்திற்கு மத்தியிலேயே கொண்டு செல்கின்றனர்.

அதிலும், குறிப்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்தவர்களின் பெற்றோர்கள் இன்று வயது முதிர்ந்த நிலையில் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பில் கடற்புலியாக இருந்து வீரச்சாவடைந்த இந்துவின் தாயார் இன்று பெரும் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

தனது நான்கு பிள்ளைகளையும் யுத்தத்தில் பறிகொடுத்த அவர் இன்று ஒருவேளை உணவுக்கு கூட பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றார். வறுமை அவரை வாட்டியெடுப்பதாக கண்ணீருடன் கூறுகின்றார்.

இதுவே இன்றைய தமிழர்களின் நிலை. தனது இனத்துக்காக, தனது இனத்தின் விடுதலைக்காக தன்னுயிரை கொடுத்த போராளிகளின் பெற்றோர்கள் இன்று கவனிப்பார் இன்றி இருக்கின்றர்.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிள்ளைகளை பெற்றெடுத்த அவர்கள், இன்று அரவணைப்பின்றி இருக்கின்றனர். இன்று கண்ணீர் விட்டு அழுவது என்னவோ ஒரு இந்துவின் தாய்தான்.

ஆனாலும் எங்கள் சமூகத்தில் இது போன்ற எத்தனையோ இந்துவின் தாயார் இருக்கத்தான் செய்கின்றனர். எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், மாவீரர்களாக மண்ணில் புதைந்துப் போனவர்களின் பெற்றோர்கள் இன்று வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் போராட்ட வாழ்க்கைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? தமிழர்களாகிய நாங்களே இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே, மாவீரர்களை நினைவு கூறுவதை போன்று இன்று வறுமைக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களின் பெற்றோர்கள் தொடர்பில் தாயக பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ் மக்கள் கரிசனை காட்டவேண்டும்.

அவ்வாறான நிலையிலேயே அவர்கள் எஞ்சியிருக்கும் தமது வாழ்நாளை நிம்மதியாக கொண்டு செல்ல முடியும் என்பது நிதர்சனம்