ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் பாலம் இருப்பது உண்மையா, பொய்யா என்ற விவாதத்திற்கு அமெரிக்க டிவி சேனல் விடையளித்துள்ளது.

'சயின்ஸ் சேனல்' இதுகுறித்த ஆய்வு ப்ரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் சேது குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டம்

அதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு.

இந்த நிலையில்தான் சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு கடல் வழி திட்டம் கொண்டுவந்தது.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவேயான ராமர் பாலம் பகுதியிலுள்ள மணல் திட்டுகளை இடித்துவிட்டு அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனால், சேது சமுத்திர திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த எதிர்ப்பாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலியளாளர்கள் சிலரும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்த கடல் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலை இத்திட்டம் கெடுத்துவிடும் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், ராமாயணம் தொடர்பான வாத விவாதங்களே இந்த திட்டத்தில் அதிகம் எதிரொலித்தது.

அமெரிக்க சேனல்

இந்த நிலையில், அமெரிக்காவின் சயின்ஸ் சேனல் வெளியிட்ட வீடியோவில், ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படும் இந்த பாலம், மனிதர்களால்தான் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை அந்த வீடியயோ 10 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

7000 ஆண்டுகள் பழமையானது

அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான், இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை.

அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா ஆய்வு

"மணல் திட்டுக்கு முன்பே அங்கு கற்களை கொண்டு மனிதர்கள் பாலம் அமைத்துள்ளனர். எனவே இதில் பல கதைகள் ஒழிந்துள்ளன" என்கிறார் தெற்கு ஒரேகான் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ்.

இதனிடையே அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதை பல நெட்டிசன்கள் வரவேற்றாலு சிலரோ, இதை இந்திய அரசே ஆய்வு செய்திருக்க வேண்டும்.

அமெரிக்க சேனல் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமா என ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.

- One India