வீடியோ ஆதாரம் ! அன்று பிரபாகரன்! இன்று ஜெயலலிதா?

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு
1641Shares

ஒரு சமூகத்தின் சிந்தனை ஆற்றலை சிதைக்க வேண்டுமாயின், அச்சமூகத்தை குழப்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்னும் அறிஞர் ஒருவரின் கருத்தானது இன்றைய தமிழ்ச் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டு இலங்கை அரசாங்கம் ஒரு காணொளியை காண்பித்தது.

அதன்பின்னர், கொல்லப்பட்டது பிரபாகரன் தான் என்றும், தலைவரின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டினர் என்றும் இலங்கை இராணுவம் தகவல்களை வெளியிட்டு, விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். இனி அவர்களின் அடையாளம் இலங்கையில் இல்லை என்பதை தமிழ் மக்களின் மனங்களில் படியச் செய்யும் வேலையைச் செய்தது.

அதேபோன்று உலக நாடுகளுக்கும் இலங்கையில் பயங்கரவாதத்தை இலங்கை தோற்கடித்து வெற்றி கண்டுள்ளதாகவும் பறைசாற்றினர். பிரபாகரன் கொல்லப்பட்டாரா? இல்லையா என்பது தொடர்பான ஆய்வுக்குச் செல்வதைவிட, அவர் கொல்லப்பட்டார் என்ற செய்தி அப்பொழுது இலங்கை அரசாங்கத்திற்கு தேவையாக இருந்தது.

எனவே அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் ஒரு ஆதாரத்தை வெளியிட்டு தன் வெற்றியை உலகுக்கு காட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தது. அதனால் தான் உடனடியாக நந்திக் கடலில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடனேயே அவரின் சடலத்தை அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டது இராணுவம்.

தலைவர் பிரபாகரனின் சடலத்தை எரித்தார்களா? அல்லது புதைத்தார்களா? என்பதிலேயே முன்னுக்குப்பின் முரணான தகவல்களை இலங்கை அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ அறிக்கையினைக் கூட இலங்கை அரசாங்கம் இன்னமும் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை.

ஆக, பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்தியின் முக்கியத்துவம் இலங்கை அரசாங்கத்திற்கு அன்று தேவைப்பட்டது. ஆகையால் காணொளி வெளியிட வேண்டியதாயிற்று. பிரபாகரன் கொல்லப்பட்டால் மட்டுமே போர் முடிக்கப்பட்டதாகும் என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்தது. அதனால் அன்று அந்த உத்தி பயன்படுத்தப்பட்டது.

அதே உத்தியை இன்று தமிழகமும் உள்வாங்கியிருக்கிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டதாக முன்னர் சொல்லப்பட்டது.

அன்று ஆரம்பித்த பரபரப்பும், மர்மமும் இன்னமும் விலகவில்லை. செப்டம்பர் 22ம் திகதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5ம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

இடைப்பட்ட அந்த எழுத்து ஐந்து நாட்களும் என்ன நடந்தது? ஒரு முதலமைச்சரின் நிலை என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படாமல் மர்மமாக வைத்திருந்தார்கள்.

ஆனால் ஓராண்டு கழித்து இன்று ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்றதொரு காணொளி வெளியிடப்பட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இது திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது. அரசியல் தேவைக்காக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அதி தீவிர ராஜதந்திரத்தை மிக நுட்பமாகப் பயன்படுத்தியிருகிறார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் எப்படி மரணமடைந்தார் என்பதில் சந்தேகம் இருக்கையில், அது குறித்த சர்ச்சை இருக்கையில் ஒரு காணொளி, அதிலும் அவர் உடல் நிலை தேறியிருப்பது போன்று இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆக, போரை முடித்ததாக உலகிற்கு காட்ட இலங்கை அரசாங்கம் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற காணொளியை வெளியிட்டு அதன்வழி தமிழ் மக்களையும் குழப்பியது.

இன்று, அரசியல் நோக்கத்திற்காக மர்மமாக இருந்த/ இறந்த ஜெயலலிதாவின் காணொளி என்று டிடிவி தரப்பு வெளியிட்டு இன்னொரு குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

தொழில் நுட்பங்கள் இருப்பவரை இல்லை என்றும், இல்லாதவரை இருந்தார் என்றும் காண்பிப்பதற்கு எவ்வளவு லாபகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நன்கறிய முடிகிறது.