மைத்திரியின் சக்கர வியூகத்திற்குள் மாட்டிக் கொண்டது யார்? மகிந்தவின் அடுத்த கட்ட நகர்வு என்ன?

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு

இலங்கை அரசியலை தற்பொழுது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது பிணைமுறி விவகாரம்.

தவறு எங்கு நடைபெற்றிருக்கிறது? யார் யார் இதில் தொடர்பு பட்டிருக்கிறார்கள் என்று விசாரணை செய்வதற்கு மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கையினை நிறைவு செய்து வழங்கியிருக்கிறது.

இந்த அறிக்கையில், மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரத்துக்கு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அதிகாரி கசுன் பலிஹேன ஆகியோரே காரணம் என்றும், மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர்களுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் சட்டத்தின்கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி காரணமாக ரூபா 11,145 மில்லியன் (ரூபா 1114.5 கோடி ) இற்கும் அதிகமான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவும் தாம் பின்னிற்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளை, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நியமித்தார். எனவே இதற்கும் இந்த ஊழல் குற்றச்சாட்டிற்கும், ரணிலுக்கும் தொடர்பு உண்டு என்று பகிரங்கமாகவே எதிர்ப்புக்கள் வலுத்துக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தருணம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேளையில் மைத்திரி நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையே இப்பொழுது பெரும் வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது மகிந்த தரப்பினருக்கு. இதனை வைத்துக் கொண்டு, ரணிலுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எதிராக களமிறங்கியிருக்கிறார்கள்.

ஆட்சியிழந்து, அதிகாரமிழந்து, மதிப்பாரற்று இருந்த மகிந்த ராஜபக்ச தரப்பினர், மீண்டும், தங்கள் அதிரடி நடவடிக்கைகளுக்காக களமிறங்கியிருக்கிறார்கள்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பதவி விலக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள்அவர்கள்.

மைத்திரி எய்த அம்பைக் கொண்டே, கூட்டாட்சியை சிதைக்க முடிவு செய்திருக்கிறது அந்தக் கூட்டம். ஆனால், இந்தச் சக்கர வியூகத்தை எப்படி உடைப்பது என்பது குறித்து மந்திராலோசனையில் ஈடுபடுகின்றனர் ஆளும் தரப்பினர்.

இந்தப் பிரச்சினையில் பிரதமர் ரணில் சிக்கியிருப்பதை வைத்துக் கொண்டு, பிரதமரை மாற்றுவதன் ஊடாக தங்கள் திட்டங்களைச் சாதிக்கலாம், கூட்டாட்சி முறையினை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்பது மகிந்தவின் கனவு. அந்தக் கனவுக்கான திட்டமிடலை அவர் தன் சகாக்களைக் கொண்டு மிக நுட்பமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.

மறுமுணையில், இந்தப் பிரச்சினையில் சிக்கியிருக்கும் பிரதமர் ரணிலை காப்பாற்றியாக வேண்டிய இக்கட்டில் ஆளும் தரப்பு இருக்கிறது. கூட்டாட்சியின் தலைவராக மைத்திரி இருந்தாலும், அவரின் ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இருந்தாலும், ஆட்சியின் அச்சாணி ரணில் விக்ரமசிங்க தான்.

உலக நாடுகளை வளைச்சுப் போடுவதில் இருந்து, இலங்கை மீதிருந்த போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதிமன்ற விவகாரம் போன்ற பெரும் வலையை உடைத்தெறிந்த மூளைக்காரர் ரணில் தான். ரணில் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின் இன்றைய ஆட்சியாளர்களின் அத்தனை கனவும் தவுடு பொடியாகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆக, வெளிவந்திருக்கும் அறிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மைத்திரியின் முடிவு. ஆனால், அந்தத் தீர்வு மக்களைத் திருப்திப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும், அதேநேரம், ரணிலைக் காப்பாற்றியதாகவும் அமைய வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் தேடி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எங்கெங்கெல்லாம் ஓட்டையிருக்கிறதோ அங்கங்கெல்லாம் உள்நுழைந்து மைத்திரி, ரணில் ஆட்சியை வீழ்த்த நினைக்கிறது மகிந்த தரப்பு. மைத்திரி ஏவிய அஸ்திரத்தால் உண்டாகியிருக்கும் சக்கர வியூகத்தில் இருந்து ரணில் காப்பாற்றப்படுவாரா? அல்லது, மைத்திரியின் சக்கர வியூகத்தைப் பயன்படுத்தி மகிந்த தரப்பு தங்கள் ஆட்டத்தை காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மகிந்த, மைத்திரி, ரணில் போன்ற சிங்கள அரச தலைவர்கள், ஒன்றுக்கொன்று காய் நகர்த்தல்களில் சற்றும் பின்னுக்கு முன்னும் முரணானவர்கலல்லர்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இவர்கள் எப்படியெல்லாம் உலக நாடுகளையும், இந்தியாவையும் சமாளித்து தங்கள் வெற்றியை நிலைநாட்டுகிறார்களோ அதேபோன்று தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிணக்குகளுக்கு முறையான தீர்வினைப் பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால், இதில், மைத்திரி, ரணில் ஒரு பக்கமும், மகிந்த ராஜபக்ச எதிர்ப் பக்கமும் நின்று களமாடுகிறார்கள். வெற்றியாருக்கு என்பதை அடுத்துவரும் சில நாட்கள் வெளிப்படுத்தி நிற்கும்.