புதிய தேர்தல் முறையின் எதிர்காலம்?

Report Print Samy in சிறப்பு
70Shares

புதிய தேர்தல் சட்டத்தில் காணப்படும் ஒரு விதியை பூரணப்படுத்த முடியாத நிலை எப்படி உருவானது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும்.

இந்தப் புதிய தேர்தல் சட்டத்தின் படி உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பதில் பெரும் சிக்கலை தோற்றுவித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த காலத்தில் பெண் பிரதிநிதித்துவம் கட்டாயப்படுத்தப்படாத நிலையில் இரண்டு சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் இருந்ததைச் சுட்டிக்காட்டி தேர்தல் விதியை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

வட்டாரத் தெரிவின் போது வாக்களிப்பு வீதத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அடுத்த விகிதாசார முறையின் கீழ் தேவைப்படும் பெண் பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்தக் கூடிய நடைமுறை பின்பற்றப்பட்டிருக்க முடியும். அது எப்படி இயலாமற்போனது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்றாகும்.

2035 பெண் பிரதிநிதித்துவம் வரவேண்டிய இடத்தில் மொத்தம் 535 உறுப்பினர்களே தெரிவாகியுள்ளனர்.மேலும் 1500 பெண் பிரதிநிதித்துவங்கள் தெரிவாகாத நிலையில் உள்ளூராட்சிச் சபைகளின் ஆட்சியமைப்பது நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது எப்படி நிகழ்ந்தது தேர்தல் முறையின் தவறா? அல்லது கட்சிகளின், சுயேச்சை அணிகளின் தவறா? என்பது கண்டறியப்பட வேண்டியதொன்றாகும்.

தேர்தலுக்குப் பொறுப்பான ஆணைக்குழு அதன் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்ற தோரணையில்தான் ஆணைக்குழுத் தலைவரின் கூற்று அமைந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டின் தேர்தல் முறை பிரதிநிதித்துவ முறை 1977 வரை தொடர்ந்து வந்தது. அந்தத் தொகுதிவாரித் தேர்தல் முறையால் கட்சிகள் ஜனநாயக நீரோட்டத்தில் வாக்குறுதி அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது.

1977ல் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கியதோடு தேர்தல் முறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தார்.

அது விகிதாசார முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. மாவட்ட ரீதியிலேயே இந்த விகிதாசார தேர்தல் இடம்பெற்றது. இதன் காரணமாக சில தொகுதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் சிலவற்றுக்கு ஒருவர்கூட இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது. இது மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

இந்த முறை தொடர்ந்து அமுலில் இருந்ததால் நாட்டில் ஆட்சி நிலையில்கூட பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. 2015 வரை இந்த முறை நீடித்தது.

2002ல் ஐ.தே.க. அரசுப் பதவிக் காலத்தில் தேர்தல் மறுசீரமைப்புக்குழுவை அமைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதன் தலைவராக எதிர்தரப்பைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனவை நியமித்து விரைவாக மறுசீரமைப்பை மேற்கொள்ள முயற்சித்தார். ஆனால் குறுகிய காலத்துக்குள் அந்த ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதால் தேர்தல் மறுசீரமைப்பு தாமதமானது.

அதன் பின்னர் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை சாத்தியமற்றுப் போனது. 2015ல் நல்லாட்சி அரசு பதவிக்கு வந்ததும் மற்றொரு அரசியலமைப்பு மாற்றம், புதிய தேர்தல் மறுசீரமைப்பு இரண்டுக்குமான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

அரசியலமைப்புக்குழு அதுகுறித்து ஆராய்வுகளை தொடர்ந்து வரும் நிலையில் தேர்தல் மறுசீரமைப்பை குறுகிய காலத்துக்குள் தயாரித்து முடித்தது. புதிய முறையில் கலப்புத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வட்டாரத் தேர்தல் முறையும், விகிதாசாரமும் கலந்து அது அமையப் பெற்றுள்ளது.இதில் முக்கியமான அம்சமாக பெண் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்தல் முறையில் உள்ளூராட்சித் தேர்தலை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. உண்மையிலேயே இந்த கலப்புத் தேர்தல் முறை உரிய வெற்றியளிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மக்களது வாக்குரிமை வெளிப்பாடு அதிகரித்துக் காணப்பட்டாலும் பல பின்னடைவுகளை இதன் மூலம் காணமுடிகிறது.பெண் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் என வலியுறுத்தப்பட்ட போதும் அந்த உரியபிரதிநிதித்துவத்தை எவ்வாறு உள்வாங்குவது என்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த உள்ளூராட்சிச் சபைகளுக்கும் 2035 பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டுமென கூறப்பட்ட போதும் ஆக மொத்தம் 535 பெண் பிரதிநிதிகளே தெரிவாகியுள்ளனர். 1500 பெண் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் காணப்படும் இந்தக் குளறுபடியை சீர்படுத்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை விடுத்து பிழைவிட்டவர்கள் யாரெனத் தேடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதத்தில் ஊடக மாநாட்டில் தெரிவித்திருக்கும் கூற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றல்ல என்பதை குறிப்பிட்டேயாக வேண்டியுள்ளது.

எது எவ்வாறாக அமைந்த போதிலும் இந்த புதிய தேர்தல் முறை குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாக நோக்கினாலும் இந்த தேர்தல் முறை நம்பகத் தன்மையற்ற தொன்றாகவே காணப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் மாற்றம் மிக முக்கியமானதாகும். தேர்தல் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சிச் சபைகளில் பெரும்பான்மையானவற்றில் ஆட்சியமைப்பதில் நிறையவே சிக்கல்கள் காணப்படுகின்றன.அதனை எவ்வாறு தீர்க்கபோகின்றோம் என்பது பிரச்சினையாகவே உள்ளது.

அவ்வாறு சபைகளின் ஆட்சி முன்னெடுக்கப்பட முடியாதுபோனால் அடுத்த கட்டச் செயற்பாடு எவ்வாறானது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவோ, அரசாங்கமோ அவசரமாக தீர்வொன்றுக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த விரும்புகின்றோம்.

செய்யத்தவறும் பட்சத்தில் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை குலையக் கூடிய அபாயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்பதை மறுப்பத்தில்லை என்பதுதான நிதர்சனமானதாகும்.