அழிவின் விளிம்பிலா உலகம்! முன்கூட்டியே கணிக்கப்பட்ட தீர்க்க தரிசனம்! சமகாலத்தில் நடைபெற்று வரும் உண்மைகள்

Report Print Jeslin Jeslin in சிறப்பு

பரந்துபட்ட இந்த உலகு நிச்சயமாக கடவுள் எமக்குக் கொடுத்த வரப்பிரசாதம் என அனைவராலும் நம்பப்படுகின்றது, இங்கு வாழும் மானுடர்கள் எல்லாம் ஏதோ ஒரு நியதியின்படி, ஒரு நேர அட்டவணையின் கீழ் பயணித்துக் கொண்டிருப்பதாய் தோன்றுகின்றது.

இந்த உலகும் கூட ஒரு திட்ட வரைவு ஒன்றின் கீழ் அதன் இயக்கங்களை கொண்டு செல்வது போன்ற ஓர் உள்ளுணர்வு.

ஆதி காலத்தில் இருந்து, அதாவது மனித இனத்தில் தோன்றிய ஆதி மனிதர்கள் தொடக்கம் காலப்போக்கில் வளர்ச்சி கண்டு தற்போது உள்ள நவீன மனித சமுதாயம் வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் வித்தியாசமான வடிவங்களில் தன் இனத்திற்குள்ளேயான பெரும் போர்களையும் அழிவுகளையும் மனிதர்கள் சந்தித்து வந்துள்ளார்கள்.

இந்த அழிவுகளை புராணங்களும் வேதங்களும் தீர்க்க தரிசனங்களாக முன்கூட்டியே சொல்லி வைக்கவும் தவறவில்லை.

அந்த தீர்க்க தரிசனங்கள் காலப்போக்கில் ஒவ்வொன்றாக அரங்கேறும் போது அதற்கு எதிரானதும் அதற்கு சாதகமாகவும் பல ஆய்வுகளும் விவாதங்களும் இடம்பெறத்தான் செய்தன.

இந்நிலையில், இவ்வாறான பேரழிவுகள் தொடர்பில் தற்போது அதிகளவில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை அறிவோமா?

உலகில் ஆதியில் தோன்றிய மதங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்குவது இந்து மதம், இதில் கடவுளின் செயல் என நம்புவோரை விட அக்காலத்தில் வாழ்ந்த சித்தர்களினதும் தீர்க்கதரிசிகளினதும் வேத வாக்குகளை நம்புவோர் அதிகம்.

சித்தர்களின் ஓலைச் சுவடிகளும் தீர்க்கதரிசிகளின் வேத வாக்குகளும் கூட இன்றைய உலகில் நடக்கும் பல சம்பவங்களை பிரதிபலித்து நிற்கின்றன.

இந்து சமயத்தின்படி இந்த உலகை மீட்க கடவுள் பல அவதாரங்களை எடுத்துள்ளதாக புராணங்களும் இதிகாசங்களும் விரிவான விளக்கங்களை தருகின்றன.

அந்த வரிசையில் பத்தாவது அவதாரமாக கூறப்படுவது கல்கி.

எப்பொழுதெல்லாம் மனிதர்களின் அமைதியான வாழ்வு சீர்குலைகின்றதோ, மனிதர்களின் இருப்பு தீய சக்திகளின் கைகளில் சிக்கி தவிக்கின்றதோ அப்பொழுது மனித குலத்தை மீட்பதற்காக இறைவன் பூமிக்கு வருவார் என்பது இந்து மதத்தில் மாத்திரமின்றி எல்லா மதங்களாலும் நம்பப்படுகின்றது.

அந்த வகையில் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் முற்றிய கலியுகத்தின் இறுதியில் தோற்றம் பெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முற்றிய கலியுகம் என்பது, அனைத்து குற்றங்களும் அனைத்து பேரழிவுகளும் சர்வசாதாரணமாக இடம்பெறும் ஒரு யுகம் என கூறப்படுகின்றது.

சத்தியத்தை பொய் ஆக்கிரமிக்கும்,
தர்மம் அதர்மத்தால் மூழ்கடிக்கப்படும்,
அறநெறிகள் அலைமோதும்,
அதர்மம் அரசாளும்,
பருவ நிலை மாறும்,
பசுமைக்கு பஞ்சம் வரும்,
வறுமை தலைவிரித்தாடும்,
பூலோகம் நரகமாகும்,
இதுவே முற்றிய கலியின் அடையாளம்.
இதன் முடிவே கல்கி அவதாரம்..

என கலியுகத்தின் அடையாளங்களை தமிழ்த் திரைப்படம் ஒன்றில் புலவரின் வரிகளில் கேட்க முடிந்தது. இது கவிஞரின் கற்பனையோ அல்லது இன்றைய நிதர்சனத்தின் தீர்க்கதரிசனமா என்று சொல்லத் தெரியவில்லை.

ஆனால் இந்த அனைத்து அறிகுறிகளும் இன்று இப்பூவுலகில் தழைத்தோங்கியிருப்பதை அவதானிக்கக் கூடியதாய் உள்ளது.

இந்து மதம் மாத்திரம் அல்ல, உலகில் நம்பப்படும், வணங்கப்படும் அனைத்து மதங்களும் இந்த கலியுகத்தினைப் பற்றி மறையுரைகளை சொல்லித்தான் வைத்திருக்கின்றன.

வெவ்வேறு வேதங்களில் உலகில் கலி யுகத்தில் நடக்கும் பேரழிவுகளை பற்றிய செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவழியின் புனித நூலான அகிலத்திரட்டு அம்மானை என்னும் நூலில்,

அழிவுக்கே நிற்கும் யுகம்தான் கலியுகம் என்றும், இன்று நடக்கக் கூடிய அத்தனை அழிவுகளை பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லியும் உள்ளார்கள்.

குறித்த நூலின் அடிப்படையில்,

பூமி நடுக்கம்

நாம் வருகிற போது மண்ணெல்லாம் கிடுகிடென்று ஆடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும் அப்போது அதிலே அநேக துர்ச்சனர்கள் எல்லாம் மாண்டு போவார்கள்,போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள்.

போர் அழிவுகள்

கேள்வி கேளாமலிருக்கிற பேர்களுக்கும் துர்ச்சனராயிருக்கிற பேர்களுக்கும் வர்த்தகனாயிருக்கிற பேர்களுக்கும் தம்மில் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு மாண்டு போவார்கள்.

என இவ்வாறு கலியுகத்தின் அழிவுகளை அகிலத்திரட்டு அம்மானை நூல் வெளிப்படுத்துகின்றது.

மேலும் அகிலத்திரட்டு அம்மானை நூலில் கலியுகத்தின் நிகழ்வுகள் இவ்வாறு விபரிக்கப்பட்டுள்ளன,

1. வானத்து இடிகள் வருடவருடந்தோறும் நீணிலத்தில் வீழும்,நின்று மலை முழங்கும்,பூமி முழங்கும் பொழுது மிகச்சாய்ந்து வரும்.

2. பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக உண்டாகும் மெய்வேதந் தன்னை விரும்பாது இகழ்ச்சி செய்வார்.

3. மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக் கேடு வரும்.

4. ஈனருக்கு காலம் ரெம்ப ரெம்ப உண்டாகும்.

5. வீணர் பெருப்பார் வீடதனை கெடுப்பார்.

6. ஈக்கள் பெருகும் எறும்பு மிகப் பெருகும்.

7. காய்கள் பெருகும் கஞ்சா அபினும் பெருகும்.

8. சன்னாசி நிஷ்டை தவறி அலைவார்கள்.

9. அக்கினியால் தண்ணீரால் அநேக சீமை அழியும்.

10.நட்சத்திரம் உதிரும் நடக்கும் வழி குறுகும்.

11.காமோக வெறியால் கன பழிகள் உண்டாகும்.

12.பொய் சேத்திர குருக்கள் பூமிதனில் மேவி வரும்.

13.கிணறு பாழாகும் கீலூற்று பொய்யாகும்.

14.காணிக்கை வேண்டல் கைக்கூலி தான் மீறும்.

இங்கு விபரிக்கப்பட்டுள்ள அனைத்தும் தற்போது இந்த யுகத்தில் அனுதினம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை, குறிப்பாக ஈழத்தில் அதிகமாய் இவை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனை.

மேலும், முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானில் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது,

திரு குர்ஆன்

20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்”.

20:16. “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்து போவீர்”.

என குர்ஆன் கலியுகத்தின் நிலையை எடுத்தியம்புகின்றது.

அதனைத் தொடர்ந்து கிறிஸ்த்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் (பைபிள்) இந்த கலியுகம் பற்றி இவ்வாறு விபரிக்கப்படுகின்றது,

II பேதுரு 3

9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்று போம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்து போம்.

11. இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்!

என இந்த கலியுகத்தில் பிரளயங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் எவ்வாறு அரங்கேறும் என்பதை விபரிக்கின்றது திருவிவிலியம்.

இதை எல்லாம் எடுத்து நோக்கும் போது, இந்த உலகு தனது ஆயுளின் இறுதிக்காலத்தை நெருங்கி விட்டது என்றே எண்ணத் தோன்றுகின்றது. வேதங்களும் புராணங்களும் அருளியது போல விரைவில் இந்த உலகு தனது இறுதி அத்தியாயத்தை எட்டலாம்.

அல்லது இதனை மீட்க ஒரு தேவ தூதன் அல்லது கல்கியின் வடிவத்தில் அவதார புருஷர் இந்த புவிதனில் அவதரிக்கும் காலம் நெருங்கி விட்டது.