சிவனா? புத்தரா? அல்ல இயேசுவின் சீடரா? காலங்கள் தாண்டி நீடிக்கும் மர்மங்கள்! விடை தேடும் பயணத்தில் இலங்கையர்கள்

Report Print Jeslin Jeslin in சிறப்பு

நாம்! யார் நாம்? எதற்காக நாம்? யாருக்காக நாம்? இவ்வாறு நாம் யார் என்ற கேள்வி அனைவரது ஆழ்மனதிலும் வேரூன்றி உள்ளது.

இந்த கேள்விக்கான விடைத் தேடி பலர் சித்தரானார்கள் சிலர் மேதையானார்கள், சிலர் தீர்க்கதரிசியானார்கள், சிலர் முற்றிலும் அறிந்தவர்களாயினும் அதை வெளிப்படுத்த முயன்ற விதத்தால் கலியுகத்தில் பைத்தியமானார்கள்.

இவ்வாறு நாம் என்ற தேடுதலின் இறுதி அடித்தளம்தான் மதங்கள், ஆனால் உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரு புள்ளியின் கீழ் ஒன்றித்து விடுவதில்லை.

ஒரு மதத்திற்குள்ளேயே சாதி என்ற பெயரில் ஆயிரம் பிரிவினைகள், ஆனாலும் இலங்கையில் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் இன மத பேதம் மறந்து இலங்கையர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிக்கின்றனர்.

இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும் ஒரு கால்த்தடம் ஒன்று சேர்க்கின்றது.

ஆதாமின் சிகரம், சிவனொளி பாதமலை என பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுவதுதான் சிவனொளி பாத மலை என்ற புனித தளம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கும் வல்லமை பெற்ற இந்த சிவனொளிபாத மலை தொடர்பில் அனைவரும் அறிந்ததே.

ஆனால் இது எந்த மதத்திற்குரியது? இங்கு உள்ள பாதம் யாருடையது என்ற கேள்விகள் இன்னும் எம் ஆழ் மனதில் குடைந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்திற்கும் மத்திய மாகாணத்திற்கும் இடையில் காணப்படும் இம்மலையுச்சியில் உள்ள பாதச்சுவடு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.

இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.

இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றித்து வழிபடும் இந்த மலையுச்சியில் காணப்படும் பாதச்சுவடு சுமார் ஐந்தரை அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றது.

பௌத்தர்களின் நம்பிக்கைகளின்படி புத்தபெருமான் 35அடி உயரமுள்ளவராம், புத்தபெருமான் இலங்கை பௌத்தர்களது காவல் தெய்வமான சமனின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்றாவது முறையாக இலங்கைக்கு வருகைத்தரும்போது சிவனொளிபாதமலையில் தனது கால்த்தடத்தைப் பதித்தாராம்.

பொதுவாக சங்கு, சக்கரம் உள்ளிட்ட 108 மங்களச் சின்னங்கள் புத்தரின் கால்த்தடத்தில் காணப்படும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறான புத்தரின் கால்த்தடங்கள் தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வணங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான அடையாளங்கள் சிவனொளிபாத மலையில் உள்ள கால்த்தடத்திலும் காணப்படுவதாகவும் எனவே இது புத்தரின் கால்த்தடம்தான் எனவும் பௌத்தர்களால் நம்பப்பட்டு வருகின்றது.

ஆனால் பௌத்தத்ததை பரப்புவதற்காக மகிந்த தேரரும், சங்கமித்தை பிக்குணியும் மாத்திரமே இலங்கை வந்ததற்கான வரலாற்று குறிப்புகள் உள்ளன. எனவே இது புத்தரின் கால்த்தடம்தானா என்ற கேள்வி எழுகின்றது.

அதைவிட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, சிவனொளிபாத மலையில் இருப்பது, கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதாமின் கால்த்தடம் என கூறப்படுகின்றது.

ஆதாம் கடவுளின் சாபத்தால் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஏவாளுடன் பூமிக்கு வந்தபொழுது இந்த சிவனொளிபாத மலையில்தான் முதன்முதலில் தங்கினார் என நம்பப்படுகின்றது.

மேலும், கடவுள் தனது சாயலில் இருந்து படைத்த முதல் மனிதனான ஆதாமும் புத்தரைப் போலவே 30 அடி உயரம் உள்ளவர் என சொல்லப்படுகின்றது.

ஆனால் இதற்கு குர் ஆனில் எவ்வித ஆதாரங்களும் இல்லையாம்? அப்போது இங்குள்ள கால்த்தடம் ஆதாமினுடையது என்பதும் கேள்விக்குட்படுத்தப்படவேண்டியதே.

மேலும் கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கையின் படி இது இயேசுக்கிறிஸ்த்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமையாரின் கால்த்தடம் என நம்பப்படுகின்றது.

எனினும் புனித தோமையார் இலங்கைக்கு வந்ததற்கான எவ்வித ஆதாரங்களோ வரலாற்றுக்குறிப்புக்களோ இல்லை. அப்போது இந்த கால்த்தடம் தோமையாருடையதுதானா என்ற கேள்வி எழுகின்றது.

அடுத்ததாக இந்துக்களை பொறுத்தமட்டில் இங்குள்ள பாதம் சிவனுடையது என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் சூரபத்மனை அழித்தபோது சிவன் இந்த மலையில் இருந்து அதனைக்கண்டு கழித்தாராம், அப்போதுதான் இந்த மிகப்பெரிய கால்த்தடமும் உருவானது என இந்துக்களால் நம்பப்படுகின்றது.

ஆனாலும் இதற்கும் எவ்வித புராண ஆதாரங்களோ வரலாற்றுக்குறிப்புக்களோ இல்லாத நிலையில் இது சிவனுடைய பாதம் என்பதும் பொய்த்துப் போகின்றது.

அப்போது யாருடையதுதான் இந்த பாதம்? இன்றுவரை விடை தெரியா இக்கேள்விகளுடன் பயணிக்கின்றது சிவனொளிபாத மலை தொடர்பான வரலாறுகள்.

பாதம் யாருடையதாகவும் இருக்கட்டும், ஆனால் அனைவரையும் இன, மத, குல, பேதங்களுக்கு அப்பால் ஒன்றித்து வழிபட வைக்கும் சக்தி இந்த மலைக்கு உள்ளது என்பதே வரவேற்கத்தக்கது.