இலங்கையின் கதாநாயகர்களாக மாறிய சம்பந்தன் - சுமந்திரன்! நன்றிக்கடன் செலுத்தவாரா ரணில்?

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு

சூழ்ச்சிகளால் நிறைந்த இலங்கை அரசியலை சரியான மையப்புள்ளிக்கு கொண்டுவர முடியாமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திணறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பெரும் புரட்சியின் நாயகனாக, எளிமையின் அடையாளமாக, ஜனநாயகத்தை விரும்பும் ஓர் மனிதராக மைத்திரிபால சிறிசேனவை உலகம் பார்த்தது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் மைத்திரிபால சிறிசேன நடந்து கொண்ட விதம் உலகம் நாடுகளுக்கு இலங்கை மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதுமாத்திரமல்லாது, ஐரோப்பிய சார்பு நிலையில் இயங்கும் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேனவின் பயணமும், சீனா சார்பு நிலையில் இருக்கும் மகிந்த ராஜபக்சவை அருகில் ஒட்டவிடாமல் பார்த்துக் கொண்ட மைத்திரியின் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்தை கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்கு அமைந்திருந்தது.

ஆனால், அவை அனைத்தும் ஒக்டோபர் 25ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன முற்றாக உடைத்தெறிந்திருக்கிறார். ரணிலை பிரதமர் பதவியில் இருந்து தூக்கியதுமட்டுமல்ல, சீனா சார்பு நிலையில் ஆசியாவில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவை மீண்டும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டது அல்லது மைத்திரி மகிந்த பக்கம் சேர்ந்து இலங்கையர்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்குமான பேரதிர்ச்சி தான்.

மகிந்த ராஜபக்சவை வீழ்த்த மைத்திரிபால சிறிசேனவை ராஜபக்ச கூண்டிலிருந்து பிரித்தெடுத்தவர்கள் இந்த மேற்கத்தேய அரசியல் சார்பு நிலையுடையவர்கள். 2015 ஆம் ஆண்டு மைத்திரியை பொதுவேட்பாளராக நியமித்து, சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளையும் அள்ளிக் குவித்து, மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பினர்.

அமைதியாக சொந்த ஊர் திரும்பிய மகிந்த ராஜபக்ச தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். சிறுபான்மை கட்சிகள் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை கொண்டு உருவானது கூட்டரசாங்கம். அன்றும் சிறுபான்மை கட்சிகள் தான் ரணிலையும் மைத்திரிபால சிறிசேனவையும் காப்பாற்றியிருந்தன.

இன்றும் அதே நிலையில் ரணில் விக்ரசிங்கவை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு. பெரும்பான்மை பேரினவாத அமைப்புக்கள், கட்சிகள் இரண்டாகப் பிரிவடைந்து பிளவடைந்து செல்லும் போது சிங்கள மக்களின் வாக்குகளும் இரண்டாக உடையும். இதனால் ஆட்சியமைக்கப்போவது யார்? யாருக்கு பெரும்பான்மையை காட்டுவது என்பதில் சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளும், ஆதரவுகளும் தேவை. அவற்றை 2015 ஆம் ஆண்டு தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினர் வெளிப்படுத்தியிருந்தனர்.

எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சிறுபான்மை மக்கள் மைத்திரி ரணில் கூட்டணிக்கு கூட்டமைப்பின் மத்தியஸ்தத்தோடு வாக்களித்தார்களோ, அதே நம்பிக்கையின் அடிப்படையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும், அரசியல் நடவடிக்கைகளும் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று இலங்கையர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். மகிந்தவை நியமித்தது, நாடாளுமன்றத்தை கலைத்தது என்பது வரை மைத்திரியின் செயற்பாடுகள் அனைத்தும் பெரும் கேலிக்குரியது என்பது கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளின் கருத்தாக இருக்கின்ற.

ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகளினால் பதவியிழந்த ரணில் விக்ரமசிங்கவின் பக்கமாக, பக்கபலமாக முன்னணியில் நிற்பவர்கள் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் தான்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், நீதிமன்றத்தை நாடும் நிலைப்பாட்டை முதலில் எடுத்தவர் சுமந்திரன். அதேபோன்று மிகத் திறமையாக வளக்காடி, நீதிமன்றத்தின் மூலமாக மைத்திரியின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடையையும் ஏற்படுத்தினார் சுமந்திரன்.

அதேபோன்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கும் இடைக்காலத் தடையை ஏற்படுத்தியும் கொடுத்தார்கள். இரண்டு முறை நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டும், அதனை மகிந்த தரப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை. மகிந்தவிற்கு எதிரான தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் வாக்களித்தன.

ஆனால். ரணில் விக்ரமசிங்கவிற்கு சிக்கலாக மாறியது தான் இன்று நடைபெற்ற ரணிலுக்கு சார்பான வாக்கெடுப்பு. இதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலேயே மறுப்புத் தெரிவித்துவிட்டது. ரணில் மீதோ, மகிந்த ராஜபக்ச மீதோ தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், இருவரும் ஒருவர் போல என்றது அக்கட்சி.

இந்நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பது பெரும் சவாலாக மாறியது ரணிலுக்கு. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு கிடைத்தால், மட்டுமே பெரும்பான்மைய நிரூபிக்க முடியும் என்ற நிலையில், கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்றுவரை ஒரு தெளிவான முடிவினை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று நிகழ்ந்த வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலமாக ரணில் தன்னுடைய 117 பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார்.

இதன்போது, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரணிலுக்கு தாங்கள் ஆதரவு கொடுத்ததாகவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே இந்த ஆதரவை வழங்கியதாகவும் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. அதேபோன்று கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்றும் ஐக்கிய தேசிய கட்சியும் தெரிவித்திருக்கிறது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பக்கபலமாக இருந்து சம்பந்தனும், சுமந்திரனும் இரண்டாவது முறையாகவும் அவரை காப்பாற்றியிருக்கிறார்கள். இலங்கை ஜனநாயகத்தை பாதுகாக்கும் கடமையில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாட்டின் அரசியலமைப்பை பேணிப் பாதுகாக்கவே ரணிலுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எதுவாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இப்போதைக்கு இலங்கையின் கதாநாயகர்கள் தான். ஆனால், நிபந்தனையற்ற ஆதரவு எந்தளவிற்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்பதை ரணில் இன்றைய தினமாற்றிய உரையின் போது கோடிட்டு காட்டியும் இருக்கிறார். அது முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும்.

எதுஎவ்வாறு இருந்தாலும், மகிந்த தரப்பினர் ரணிலின் பெரும்பான்மையை ஏற்றுக் கொள்ளாமல் போனாலும், ஏற்றாலும், சம்பந்தன், சுமந்திரனுக்கு மிகப்பெரும் கடமைப்பட்டிருக்கிறார் ரணில். அதற்காக அவர் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கைகளைக் குலுக்கி தனது சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுமந்திரனோடு ஒரு நிமிடம் சிரித்து மகிழ்ச்சியாக பேசியும் இருக்கிறார். இந்த மகிழ்ச்சி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் இருக்குமாயின் கூட்டமைப்பின் இந்த முயற்சிக்கு பலன்கிட்டியதாக கொள்ளப்படும். இல்லையேல், பழைய பல்லவிதான்....!