தமிழ் மக்களுக்கு கனடா பிரதமர் பொங்கல் வாழ்த்துக் கூறியது உண்மையா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள காணொளி

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ் மக்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியுள்ளதாக தெரிவித்து வெளியாகியுள்ள காணொளிகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் மக்கள் கனடாவிற்கு செய்த பங்களிப்பை போற்றும் வகையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முழுவதும் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் கனடா பிரதமர் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியிருந்தார். இது குறித்த காணொளிகள் வெளியாக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.

இந்நிலையிலேயே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியுள்ளதாக தெரிவித்து தற்போது சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று வைரலாக பரவியுள்ளது.

எனினும், குறித்த காணொளி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியது உண்மையா என்பது குறித்து பிபிசி ஆய்வு செய்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியதாக பரப்பப்பட்டு வரும் இரண்டு காணொளிகளும் அடிப்படையில் உண்மையானதாக இருந்தாலும், அது இந்தாண்டு வெளியிடப்படவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் பொங்கலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துத் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகியுள்ளதாகவும் பிபிசி கூறியுள்ளது.

இதுகுறித்து பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தனது சமூக ஊடக பக்கங்களின் மூலமாக இதுபோன்ற வாழ்த்துக்களை தெரிவிப்பதையே கடந்த காலங்களில் கனடா பிரதமர் வழக்கமாக கொண்டுள்ளார்.

எனினும், அவரது முகப்புத்தகம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆராய்ந்ததில் இந்தாண்டு இன்றைய திகதி வரையில் அவர் பொங்கல் குறித்து எவ்வித பதிவுகளையும் இடவில்லை என்பது தெளிவாகிறது.

எனினும், தற்போது வாழ்த்து கூறியுள்ளதாக தெரிவித்து இரண்டு காணொளிகள் வைரலாக பரவியுள்ளன. இந்த இருவேறு காணொளிகளிலும், வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசும் அவர் இறுதியில் தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.

முதலாவது காணொளியில், தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை கொண்டாடுவதற்குரிய அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதையும், கனடாவின் 150வது ஆண்டு விழாவையும் மையாக கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் ஒருசேர பேசுகிறார்.

இந்தக் காணொளி அவரது சமூக ஊடக பக்கங்களில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது காணொளியில், பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்தும், கனேடிய தமிழர்கள் அந்நாட்டிற்கு அளித்து வரும் பங்களிப்பை போற்றும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது.

இந்த காணொளி ஜஸ்டினின் சமூக ஊடக பக்கங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பொங்கலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்துத் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகியுள்ளதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.