திரிபுராவில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

Report Print Murali Murali in சிறப்பு

அண்மையில், திரிபுரா அருகே உள்ள இந்திய - பங்களாதேஷ் எல்லையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளில் 27 பேர் அகதிகளாக ஐ.நா.விடம் பதிவு செய்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 4 பேர் குழந்தைகள் என்றும் அவர்கள் ஐ.நா.விடம் பதியவில்லை என்றும் அகதிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அகதிகளை துன்புறுத்தக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்ற சர்வதேச விதியை இந்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 18 முதல் திரிபுரா அருகே உள்ள இந்திய - பங்களாதேச எல்லைப்பகுதியில் யாருமற்ற நிலப்பகுதியில் சிக்கிக்கொண்ட ரோஹிங்கியா அகதிகளை கையாள்வதில் இந்திய படைகளுக்கும் வங்கதேச படைகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டு இருந்தது.

அகதிகளை தங்கள் நாட்டு எல்லைக்குள் தள்ளுவதாக இரு படைகளும் பரஸ்பரமாக குற்றம்சாட்டி வந்தன.

அதன் தொடர்ச்சியாக இரு படைகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், 31 ரோஹிங்கியா அகதிகளும் திரிபுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

திரிபுராவில் சிறைவைக்கப்பட்டுள்ள 31 ரோஹிங்கியா அகதிகளும் முன்னர் ஜம்மு - காஷ்மீரில் அமைந்திருக்கும் அகதி முகாமில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மரிலிருந்து அகதிகளாக வெளியேறிய 40,000 த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள், இந்தியா எங்கும் பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர். அதில் 18,000 பேர் ஐ.நா.விடம் பதிவு செய்தவர்கள்.

இதற்கு முன்பு, ஐந்து பேர் கொண்ட ஒரு ரோஹிங்கியா குடும்பத்தின் மீதும் அக்டோபர் 2018ல் 7 ரோஹிங்கியா அகதிகளின் மீதும் மியான்மருக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.