வவுனியா மண் தேடித்தந்த சாதனை மங்கை! யார் இந்த அஞ்சலா?

Report Print Gokulan Gokulan in சிறப்பு

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டிருக்கும் காலம் இது.

தந்தை உழைக்கு வருமானம் போதாது தாயும் உழைக்கும் காலத்தில் பெண்களை போற்ற வேண்டிய நாள் இன்றாகும்.

நாம் வாழ்ந்து வரும் சமுதாயத்தில் தியாகத்துடனும், அர்ப்பணிப்புடனும் பெண்கள் வாழ்ந்துக் கொண்டு தான் உள்ளார்கள். நம் கண்களால் அவர்களை காண்பது அரிது.

அந்த வகையில் வவுனியாவைச் சேர்ந்த அஞ்சலா ஒரு சாதனை பெண்ணாக இன்று சமூகத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாட்டை உடைந்தெறிந்துவிட்டு பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அஞ்சலா. பெண்கள் என்றால் பயந்த சுபாவமுடைய, அடுப்பங்கரைக்கு உரியவள் என்ற விதியையே தலைகீழாக மாற்றியுள்ளார் அவர்.

அஞ்சலாவின் கணவர் கோகில குமார். அவர் ஒரு சாரதி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உண்டு.

குடும்ப வருமானம் குறைவாக இருந்த நிலையில் ஒரு நாள் கணவரிடம் பேருந்து ஓட்டுவதற்கு சொல்லி தருமாறு கேட்டுள்ளார்.

பின்னர் தைரியமாக பேருந்து ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார். குடும்ப வருமானத்திற்காக தானும் பேருந்து ஓட்ட ஆரம்பித்துள்ளார்.

முதன்முறையாக வவுனியாவிலிருந்து கிடாச்சுரி எனும் ஊரிற்கு இவர் பேருந்து ஓட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் இவர் ஓட்டும் பேருந்தில் பயணிப்பதற்கு நிறைய பேர் பயந்துள்ளனர்.

நாளடைவில் கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் தைரியமாக பேருந்தில் பயணிக்க ஆரம்பித்துள்ளதுடன் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அஞ்சலா ஓட்டும் பேருந்தில் பயணித்தால் பாதுகாப்பாக, சுமுகமாக செல்லலாம் என்ற நம்பிக்கை அம்மக்களின் மனதில் எழ ஆரம்பித்து விட்டது.

பெண்களால் எல்லாம் சாதிக்க முடியும். எல்லாவற்றிலும் செயற்பட முடியும். என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக பேருந்து ஓட்டுகின்றேன் என அஞ்சலா தெரிவித்துள்ளார்.

இன்று தனது குடும்பத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது என்ற திருப்தியுடன் அஞ்சலா உள்ளார்.

நம்பிக்கையும் தைரியமும் பெண்களுக்கு வரும் போது அவர்கள் நினைத்ததை சாதிக்கிறார்கள் என்பதே உண்மை. இப்படியான பெண்கள் போற்றப்பட வேண்டியவர்களே!