பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய கோரும் போராட்டம்! அன்னை அற்புதம்மாளும் பங்கேற்பு

Report Print Steephen Steephen in சிறப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை சம்பவத்தில் தமிழக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் இடம்பெற்ற மனித சங்கிலிப் போராடத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உட்பட பல அரசியல் கட்சியினர் பங்கேற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர்.

இவர்களது தண்டனை காலம் முடிந்தும் இதுவரை அவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை. அண்மையில் பேரறிவாளனும், ரவிச்சந்திரனும் பரோலில் வந்தனர்.

இந்த நிலையில் சட்டப் பிரிவு 161-ஐ பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநில அரசே 7 பேர் விடுதலையில் முடிவு எடுக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அதை அனுப்பியிருந்தது. எனினும் இது தொடர்பாக ஆளுநர் இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

இதையடுத்து 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கோரி மார்ச் 9ஆம் திகதி 7 நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அறிவித்தார்

இந்தநிலையில் சென்னை சேப்பாக்கம் அருகே மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது.

போராட்டத்தில் அற்புதம்மாளும், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள், விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

7 பேர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர் ராம், கவுதமன், அமமுக நிர்வாகி வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் மதுரை, கோவை, புதுவை, சேலம் உட்பட 7 நகரங்களிலும் நடைபெற்றது.