அமைச்சர்கள் மூவருக்கு மரண அச்சுறுத்தல்!

Report Print Kamel Kamel in சிறப்பு

தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் மூன்று அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரகசியமான கடும்போக்கு அமைப்பு ஒன்றினால் தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மூன்று அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டு போரின் பின்னர் கடும்போக்குடைய தீவிரவாத அமைப்பு ஒன்றினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முதல் தடவையாக இலங்கையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடும்போக்கு அமைப்பிற்கு சர்வதேச ரீதியான தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வரும் கும்பல் ஒன்றே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொலை மிரட்டல்களுடன் தொடர்புடைய நான்கு பிரதான சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நபர்கள் இலங்கையில் இரகசியமான முறையில் ஆயுத முகாம்களை பேணியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை, அம்பாறை, புத்தளம் மற்றும் மாவனல்ல ஆகிய பகுதிகளில் இந்த கடும்போக்குடைய அமைப்பு சில செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீவிரவாத அமைப்பினால் தங்களது உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்த அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் அமைச்சர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களே இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Latest Offers