சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து ஐ.நா?

Report Print Murali Murali in சிறப்பு

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு இன்று கொழும்பு வரவுள்ள நிலையில், இந்தக் குழுவில் உள்ள நிபுணர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குச் நுழைய அனுமதி கோரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையிலேயே, சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழு முதல் முறையாக சிறிலங்காவுக்கு இன்று வரவுள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 12ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தவுள்ளது.

ஐ.நாவின் நான்கு நிபுணர்களைக் கொண்டு இந்தக் குழுவினர், காவல்துறை தடுப்பு நிலையங்கள், சித்திரவதைக் கூடங்களாக இருந்த இராணுவ மற்றும் கடற்படை முகாம்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும், இந்தக் குழு நுழைந்து பார்வையிடக் கோரவுள்ள இடங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா உப குழுவின் மனித உரிமைகள் அதிகாரி ஆர்மென் அவெரிஸ்யான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“இன்னமும் பயணம் தொடங்கவில்லை. இந்தப் பயணம் தொடர்பாக எந்த தகவலையும் வழங்கக் கூடிய நிலையில் நான் இல்லை.

சித்திரவதைகளுக்கு எதிரான உப குழுவின் பணி இரகசியத்தன்மை கொள்கையின் அடிப்படையில் வழி நடத்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நீதித்துறை ஆணைக்குட்பட்ட அனைத்து இடங்களுக்கு ஐ.நா குழுவை எந்தவொரு அரசாங்கமும் அனுமதிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும் என்றும் ஆர்மென் அவெரிஸ்யான் கூறியுள்ளார்.

- Puthinappalakai