இலங்கையை சூழ புதைந்திருக்கும் பெரும் பொக்கிஷம்! ஆய்வுகளின் ஊடாக கண்டுபிடிப்பு

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பிரதேசம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. இலங்கை தீவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

குறிப்பாக, தமிழ் நாட்டின் அருகிலுள்ள மன்னார் வளைக்குடா பகுதியிலேயே அதிக இயற்கை எரிவாயு காணப்படுகின்றது. மன்னார் முதல் தென் பகுதியின் காலி வரையான கடல் பிரதேசத்தில் இந்த எரிவாயு வளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் வட கிழக்கு பகுதியிலும் இயற்கை எரிவாயு வளங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளன. பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் டோடா நிறுவனத்தினால் கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்படி, யாழ்ப்பாணம் முதல் திருகோணமலையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் இந்த இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கின்றமை கண்டறிப்பட்டுள்ளன.

டோடா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த நிறுவனம் தீர்மானிக்கும்” என வஜிர தஸநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.