அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள ஈழ அகதி குடும்பம் ஒன்று அந்த நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இடம்பெறும் அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றால் இவர்கள் நாடு கடத்தப்படுவதில் இருந்து காப்பாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
விசா முடிவடைந்த நிலையில், பிரியா மற்றும் நடேசலிங்கம் தம்பதியினரும் அவர்களது இரண்டு மகள்களும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தயாரான நிலையில், ஏற்பட்ட எதிர்ப்புகளை அடுத்து நாடு கடத்தப்படுவதில் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும், அவர்கள் எந்நேரமும் நாடு கடத்தப்படும் ஆபத்தை கொண்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடகப் பேச்சாளர் அரன் மயில்வாகனம் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றால் பிரியா மற்றும் நடேசலிங்கம் தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்குவதற்கு அனுமதிக்கப்படலாம்.
"சட்டப்பூர்வ வழிகள் அனைத்தும் தீர்ந்து விட்ட நிலையில், இந்த குடும்பத்தை இலங்கைக்கு திரும்ப அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது உறுதியாகியுள்ளது.
எனினும், மற்றொரு தாராளவாத அரசாங்கம் கிடைத்தால் அது உறுதியளிக்காது. அரசாங்கத்தில் ஏற்படும் மாற்றம் இந்த குடும்பத்தை இங்கு தங்குவதற்கு துறையின் மனநிலையை மாற்றி விடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எவ்வாறாயினும், இந்த குடும்பத்தினர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்க நேரிடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரியா மற்றும் நடேசலிங்கம் தம்பதியினர் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து 180,000 க்கும் மேற்பட்ட குயின்ஸ்லாந்து மக்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.