அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நிலையில் இருக்கும் இலங்கை தமிழர்!

Report Print Murali Murali in சிறப்பு

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதி ஒருவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த இலங்கை அகதி புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

2010ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதும், பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என தெரிவிக்கப்பட்டு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ள நிலையிலும், அவர் தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலிய சட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவரால் மீண்டும் பாதுகாப்பு விசாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.