தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சுமந்திரனுக்கு மகிந்த எச்சரிக்கை விடுத்திருந்தாரா?

Report Print Murali Murali in சிறப்பு

எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எச்சரிக்கையை அடுத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செல்லவில்லை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், அந்த செய்தியை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முற்றாக நிராகரித்துள்ளார். இது குறித்து தனது முகப்புத்த பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த 21ம் திகதி தாம் கொழும்பில் தேவாலயம் ஒன்றில் ஆராதனையில் ஈடுபட்டிருந்தேன். எனினும், அதன்போது குண்டுத் தாக்குதல் குறித்த எந்த விபரங்களையும் அறிந்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், குண்டு வெடிப்பு இடம்பெற்றதன் பின்னர் தாம் உடனடியாக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சென்று, அருட்தந்தையுடன் கலந்துரையாடியிருந்தேன்.

தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் சடலங்களும் கிடந்தன. இது ஒரு தற்கொலை தாக்குதல் என தெரிந்தது. உடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவிற்கு சென்றிருந்தேன்.

அங்கு சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், மருத்துவமனை இயக்குநர் மற்றும் ஏனையவர்களுடன் சந்தித்து பேசியிருந்தேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, தமக்கு குண்டுத் தாக்குதல் குறித்து முன்னதாகவே எச்சரித்தமைக்காக சுமந்திரன் நன்றி கூறியதாக நேற்றைய தினம் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.