ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை!

Report Print Murali Murali in சிறப்பு

பயங்கரவாத சவால்களிலிருந்து நாட்டை விடுவித்து தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு தமது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக சிலர் முன்வைக்கும் கருத்துக்கள் தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குரல் கொடுப்பதை விடுத்து, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமாதானமான, சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுவதே நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளினதும் கடமையாகும்.

விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நியாயமானதாக இருக்க வேண்டும். வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலான விமர்சனங்களும் சரியான தகவல்களை அறியாது முன்வைக்கப்படும் கருத்துக்களும் பலனற்றவை.

பல மதங்களை பின்பற்றும் மக்கள் வாழும் ஒரு நாட்டில் எந்தவொரு மதத்தினரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கக் கூடாது.

ஆகையினால் நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் கருத்து தெரிவிக்கும்போது நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான புரிந்துணர்வுடனும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுத்தார்.