தற்கொலை தாக்குதல் சந்தேகநபர்களுக்கு பிணை! விசாரணைகளை ஆரம்பித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு

Report Print Murali Murali in சிறப்பு
567Shares

தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“வெல்லம்பிட்டியவில் உள்ள வெண்கல தொழிற்சாலை உரிமையாளர் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலை குண்டுதாரியான முகம்மத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட் ஆகும்.

ஏப்ரல் 22ம் திகதி, அந்த தொழிற்சாலையில் ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு இல. 2 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் மே 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு மே 06ம் திகதி அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

பொலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) வெல்லம்பிட்டிய பொலிஸ் தரப்பில் ஏதாவது தவறுகள் அல்லது அலட்சியம் என்பன இந்த சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்படுவதற்கு வழிவகுத்ததா என்பதை கண்டறிய ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

குறித்த விசாரணைகளில் வெல்லம்பிட்டிய பொலிஸ் தரப்பில் தவறுகள் கண்டுபிடிக்கப்படின் பொறுப்பான அதிகாரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை விடுவிக்குமாறு ஹொரொபதன பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முயற்சித்த ஒருவர் புதன்கிழமை (மே, 08) இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, காவலில் உள்ள சந்தேகநபரின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன.

இரு தரப்பிலும் இச்சம்பவம் தொடர்பாக கூறப்பட்டுள்ள முறைப்பாடுகளை தொடர்பாக ஒரு இணக்கமான தீர்வுக்கு வர விரும்புவதாக பொலிஸாருக்கு இரு மதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் இதற்கு முன்னர் இருந்ததைப்போன்று மக்கள் அங்கு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்கிறார்கள்.

எனவே, இது தொடர்பாக பொலிஸ் அதன் முழுமையான உதவியை வழங்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இதேவேளை, பெல்வத்தை சீனி தொழிற்சாலை தலைமை நிர்வாக அதிகாரி, அவரது சாரதி மற்றும் மற்றொரு பணியாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து பொலிஸார் ஐந்து வாக்கி-டோக்கி உபகரணங்கள், அமைச்சு பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடையை ஒத்த பல சீருடைகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து விளக்குகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டன.

சீனி தொழிற்சாலை ஊழியர்களினால் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பகுதி சோதனை செய்யப்பட்டது.

சந்தேக நபர்கள் புத்தள பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இராணுவ பேச்சாளர் மற்றும் ஊடக மைய பணிப்பாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்களின் தலைமையில் இச்செய்தியலாளர் மாநாடு இடம்பெற்றது.