இரண்டாவது முள்ளிவாய்க்காலும் பரந்துபட்ட மாற்றுத் தலைமையும்

Report Print M.Thirunavukkarasu in சிறப்பு

ஒரு நூற்றாண்டிற்கும் மேலான ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றின் பெறுபேறாய் தமிழ் மக்களின் வாழ்வு தற்போது யார்த்தத்தில் எவ்வாறு காணப்படுகின்றது என்று பார்க்க வேண்டிய அறிவியல் பார்வையும், அதன் அடிப்படையிலான புதிய பயணமுமே இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

இவ்வாறு மூத்த அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இன்றைய சமகால அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுகள் குறித்தும், பல்வேறு நகர்வுகள் தொடர்பிலும் அவர் பின்வருமாறு விபரிக்கிறார்.

சேர் பொன். இராமநாதன் , சேர் பொன். அருணாசலம் முதல் இன்றைய ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா வரை தமிழரின் அரசியல் வாழ்வானது தோல்விகளின் தொகுப்பாகவே காணப்படுகிறது.

எதிரியின் இராணுவச் சப்பாத்துக் காலடியில் விடப்பட்டவர்களாய், அந்நியர்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாய், சொந்தத் தலைவர்களால் கைவிடப்பட்டவர்களாய், அரசியல் அநாதைகளாய், நாடற்று, வீடற்று அலைகளால் அடிபட்டு அலையும் சாதளைகளாய் கதியற்ற நிலையில் தமிழ் மக்கள் காணப்படுகின்றனர். அவர்களைக் காப்பாற்ற அவர்களிடம் ஓர் அரசும் இல்லை, அவர்களுக்காக குரல் கொடுக்க, கைகொடுக்க எந்தொரு நாடும் இல்லை. உதவிக்கரமற்ற, குரலற்ற அரசியல் அநாதைகளாய், கைவிடப்பட்ட மக்களாய் காணப்படும் ஈழத் தமிழரின் எதிர்காலம் பற்றி முற்றிலும் புத்திபூர்வமாக சிந்திக்கவும், செயற்படவும் வேண்டிய இறுதிக் காலகட்டமிது.

எல்லாவிதமான புகழ்ச்சிக்கும், பாராட்டிற்கும், மேன்மைக்கும் அப்பால் இறுதி அர்த்தத்தில் பெரிதும் தோல்வியடைந்து அவமானகரமான சீரழிந்த வாழ்விற்கு உட்பட்டவர்களாய் தமிழ் மக்கள் உள்ளனர். உலகில் எவராலும் கேட்பாரின்றியும், பார்ப்பாரின்றியும் இனப்படுகொலைக்கு உள்ளாகி சீரழிந்த வாழ்வோடு அழிவின் விளிம்பில் அலைமோதும் மக்களாய் இவர்கள் உள்ளனர்.

விருப்பிற்குரியவன் - வெறுப்பிற்குரியவன் என்று பார்க்காமல், என்னவன் - உன்னவன் என்று பார்க்காமல், இகழ்ச்சிக்கும் - புகழ்ச்சிக்கும் உள்ளாற் பார்க்காமல் அனைத்துவகை முற்கற்பிதங்களுக்கும் அப்பால், ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் அரசியல் தோல்விகளுக்கான காரணங்களையும், காரண கர்த்தாக்களையும் கண்டறிந்து நடைமுறையில் தமிழ் மக்கள் தம்மைத் தற்காக்கவும், முன்னேறவும் வேண்டியதற்கான வழி என்ன என்பதை கண்டறிய வேண்டியதற்கான சூளுரையை முள்ளிவாய்க்கால் பெருந்துயர பத்தாண்டு நினைவேந்தல் நாளில் எடுக்க வேண்டியது அவசியம்.

நடந்து முடிந்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு வெடிப்புக்கள் வரலாறு சார்ந்த நடைமுறை அர்த்தத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை-2 என்ற முத்திரைக்கு உரியதாகும்.

இத்தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல் முள்ளிவாய்க்கால்-1 இனப்படுகொலை வெற்றியை அதன் இரண்டாம் கட்டத்திற்கு இட்டுச் செல்லப் போகின்றது.

அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு இத்தொடர் குண்டு வெடிப்புக்கள் பெரும் இன்னல்களை ஏற்படுத்தும் என்பதுடன் கூடவே தமிழ் மக்களை மேலும் ஒடுக்குவதற்கான அரசியலை முன்னெடுக்கவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அது வழிவகுத்துள்ளது.

“ஒரு செயலை அச்செயலின் வசீகரத்தால் அன்றி அச்செயல் தரவல்ல விளைவினால் எடைபோட வேண்டும்” என்ற ஒரு வரலாற்று மதிப்பீட்டுக் கூற்றுண்டு.

தொடர் குண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்தவல்ல அரசியல் விளைவை முற்றிலும் விஞ்ஞானபூர்வமான கண்கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம்.

எங்கு குழப்பங்கள் ஏற்படுகின்றனவோ அங்கு குழப்பங்களின் குழந்தைகளான தலைவர்கள் தோன்றுவார்கள் என்பது வரலாற்று நியதி.

சுமூகமான அரசியல் சூழலில் மட்டுமே ரணில் போன்ற நாடாளுமன்ற அரசியல் தலைவர்களால் வெற்றி பெற்று ஆட்சி பீடம் அமர முடியும். நாடாளுமன்றம், பொலீஸ், இராணுவம், அதிகாரவர்க்கம் என்பவற்றின் துணையுடன் அரசியல் நடாத்தக்கூடிய ஒரு நாடாளுமன்ற அரசியல்வாதியே ரணில் ஆவார். அவர் நாடாளுமன்ற முறைக்கு வெளியான ஓர் எக்ஸ்ட்ரா பார்லிமென்டரி பொலிட்டீஸன் (நுஒவசய Pயசடயைஅநவெயசல Pழடவைiஉயைn) அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சியில் பிரேமதாசா மேற்படி ஓர் எக்ஸ்ட்ரா பார்லிமென்டரி பொலிட்டீஸன் ஆகக் காணப்பட்டார். இப்போது அவரது மகன் சஜீத் பிரேமதாசாவிடம் அதற்கான ஆளுமை ஓரளவு உண்;டு என்ற கருத்துண்டு. ஆனால் ரணிலோ அல்லது மற்றும் ஐ.தே.க.வின் உயர் குழாத்தைச் சேர்ந்த தலைவர்களோ அவ்வாறு சஜீத் முன்னணி வகிப்பதை ஏற்க மாட்டார்கள்.

இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த குழப்பகரமான அசாதாரண சூழலிற்தான் பிரேமதாசாவாற்கூட பதவிக்கு வரமுடிந்தது. அதாவது குழப்பகரமான சூழலில் அதற்குரிய இயல்பைக் கொண்டவர்கள் பதவிக்கு வருவது சாத்தியப்படும். பிரென்சு புரட்சி நிகழ்ந்து முடிந்த குழப்பகரமான சூழலிற்தான் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நெப்போலியனால் ஆட்சிக்குவந்து சர்க்கரவர்த்தியாய் முடிசூட முடிந்தது.

இப்படி முதலாவது உலக மகாயுத்தத்தில் ஜெர்மனி அடைந்த தோல்வியின் பின்னணியில் ஜெர்மனியில் காணப்பட்ட குழப்பகரமான அசாதாரண சூழலில் ஹிட்லரால் பதவிக்கு வந்து இனப்படுகொலை ஆட்சியை நடத்த முடிந்தது. இது இத்தாலிய ஆட்சியாளன் முசோலினிக்கும் பொருந்தும்.

நீண்டநெடும் வரலாற்றில் இதற்கான இத்தகைய உதாரணங்களை ஆயிரக்கணக்கில் காணலாம்.

தற்போது உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டு வெடிப்புக்களால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் ராஜபக்ஷ குடும்பம் அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்புக்கள் பெருகியுள்ளன. தற்போதைய இலங்கையின் இராணுவமும், புலனாய்வுத் துறையினரும் தெளிவான அர்த்தத்தில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமான படையினராவர். அதாவது தமிழின அழிப்பின் பேரால் ராஜபக்ஷ குடும்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இராணுவ நிறுவனமே இது.

ராஜபக்ஷ குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு சிறு தொகையினர் ஓய்வு பெற்றிருந்தாலும் ஒரு சிறு தொகையினர் மிக இளவயதினராக இராணுவத்தில் சேர்ந்திருந்தாலும் அது இராணுவ கட்டமைப்பில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமான கட்டமைப்பை பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்காது.

எனவே எப்படியோ குழப்பங்களின் மத்தியில் இராணுவமே அதைத் தீர்ப்பதற்கான பிரதான கருவியாகும். அந்தப் பிரதான கருவியான இராணுவம் ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமானதாக அமைந்து அவர்களின் அரசியல் வெற்றிக்கான முதுகெலும்பாய் விளங்கும்.

குண்டுவெடிப்புக்களானது அனைத்து தேர்தல்களையும் அதன் இயல்பு நிலைகளுக்கு அப்பால் தள்ளிவிட்டது. வரும் ஜனவரி மாதத்திற்கு முன் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டிய ஓர் இறுதிக் கட்டாயம் உண்டு. எனவே அதற்கு முன் மாகாணசபைத் தேர்தல்கள் எதுவும் உரிய காலத்தில் நடைபெறாது.

ஜனவரிக்கு முன் நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் பருவமழைக் காலத்திற்கு முன் என்ற அடிப்படையில் அக்டோபர் இறுதிக்குள் நடைபெற வேண்டும். அல்லது அது ஜனவரியாக அமையமுடியும். இக்;காலகட்டம் பெரிதும் இராணுவ நடமாட்டம் மிக்க குழப்பகரமான காலமாகவே அதற்குரியவர்களால் பேணப்படும்.

குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆனபோதிலும் அவற்றால் பாதிப்புற்ற தமிழ்க் கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மக்கள் மீது எவ்வித வன்செயல்களிலும் ஈடுபடவில்லை. ஆனால் இரண்டு வாரங்களின் பின் சிங்களத் தரப்பினரால் தெற்கில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதுவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இராணுவ-பொலீஸ் அனுசரணையுடன் இக்கலவரங்கள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அதேவேளை தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய இன்னொரு விடயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்த தமிழ்ப் பகுதியான மட்டக்களப்பிலும் மற்றும் குண்டுவெடிப்பு நிகழாத வடபகுதியிலுந்தான் முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழல் நிலவுகிறது.

குண்டுவெடிப்பின் பின்னான அவசரகால சூழலில், இராணுவத்தின் கையில் நடைமுறை ரீதியான ஆட்சி அதிகாரம் உள்ள நிலையில் அமைதியின்மையை தேவைக்கு ஏற்ப நீடிக்க முடியும். இத்தகைய அமைதியின்மையின் கீழ் ராஜபக்ஷ குடும்பம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமானவை.

அமைச்சர் றிஷாட் பதியூதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அக்குரண ரத்தன தேரரின் முயற்சியால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துடன் சபநாயகரிடம் கையளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் சூழலில் அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது முஸ்லிம் மக்களின் வாக்குக்களைக் குறிவைத்து இத்தகைய நகர்வை ராஜபக்ஷக்கள் மேற்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

எப்படியோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் ஒருவர் அதைத் தொடர்ந்து பெப்ரவரி 12ஆம் தேதிக்கு பின் நாடாளுமன்றத்தை எந்;;நேரத்திலும் கலைத்து புதிய தேர்தலை நடாத்த முடியும். அத்தருணத்திலும் குழப்பகரமான சூழல் கைகொடுக்கக்கூடியதாக அமையும் போது அதற்கான வெற்றி வாய்ப்புக்கள் பெரிதும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சார்ந்து அமைய வாய்ப்பு இருக்கும்.

இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பின்புதான் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படும். இது தேர்தல்கள் பற்றிய ஒரு தர்க்கபூர்வமான வரைபடமாகும்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மேற்படி குண்டுத்தாக்குதல்கள் அரசியல் ரீதியில் வரப்பிரசாதமான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. அதாவது “புதிய அரசியல் யாப்பு”, “அரசியல் தீர்வு” என்று பேசி வந்தவர்கள் இவர்கள். சில மாதங்களுக்குள் வானத்தைப் பிடுங்கிப் பூமியில் நடுவோம், நட்சத்திரங்களைப் பிடுங்கித் தோரணங் கட்டுவோம் என்று தமிழ் மக்களுக்கு பொய்யான, நடக்கமுடியாத வாக்குறுதிகளை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது மேற்படி உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களால் வானம் பிளந்து நொருங்கிவிட்டது, நட்சத்திரங்கள் சிதறிப் பறந்துவிட்டன, எனவே “புதிய அரசியல் யாப்பும்”, “அரசியல் தீர்வும்” குண்டுவெடிப்புக்களால் சிதறிப் பறந்து போய்விட்டன என்று அப்பாவித் தமிழ் மக்களை இலகுவாக ஏமாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இப்பின்னணியில் மாற்று அரசியல் பற்றிப் பேசுகின்ற சக்திகள் தம்மை ஒன்றுபட்ட சக்தியாக நிரூபிக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு துணை போனவர்களான வரலாற்றுப் பழிக்கும், பாவத்திற்கும் உள்ளாவர்.

தனிப்பட்ட அனைத்துவகை சுயநலங்களுக்கும் மூட்டை கட்டிவிட்டு, கேட்பாரின்றி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, நடைமுறைச் சாத்தியமான உடனடி தற்காப்பு கோரிக்கைகளின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். அந்த உடனடிக் கோரிக்கை “மஹாவலி எல் வலய” குடியேற்றத்தடுப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பவற்றுடன் மேலும் 90,000 விதவைப் பெண்களுக்கு வாழ்வளிக்கவல்ல ஓர் உதவிநலத் திட்டத்தை வகுத்து அதனை உள்நாட்டுத் தமிழர், புலம்பெயர் தமிழர் மற்றும் நலம் விரும்பிகள் என்பவர்களின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்.

“சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்”. தமிழ் மக்கள் சிங்களக் குடியேற்றங்களால் அழிக்கப்பட்டுவிட்டால், தமிழ்ப் பகுதி சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டால் அதன்பின்பு அரசியல் பேச தமிழ்த் தரப்பில் யாரும் இருக்க முடியாது. கூடவே தமிழ்மண் சிங்களமயமாக்கப்பட்டு தமிழர்கள் பலவீனடைந்துவிட்டால் இலங்கை அரசு ஒருபோதும் இந்தியாவை பொருட்படுத்தாது அந்நிய சக்திகளுடன் கைநீட்டி கூட்டுச் சேரும். இது தமிழருக்கு மட்டுமன்றி கூடவே இந்தியாவிற்கும் தீங்காக அமையும்.

அரசற்ற, அநாதைகளான, வெளிநாட்டு அரசுகளின் ஆதரவுக்கரமுமற்ற அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கத் தேவையான ஒருங்கிணைக்கபட்ட அரசியலை முன்னெடுக்க தமிழ்த் தலைவர்கள் புத்திபூர்வமாக தயாராக வேண்டும்.

குண்டுவெடிப்பின் பின்னான சூழலானது தமிழ் மக்களை முற்றிலும் வேட்டைப் பிராணிகளின் வாய்க்கு இரையாக்கக்கூடிய பின்னணியை உருவாக்கியுள்ளது. இதனை அதற்குரிய அர்த்தத்தில் புரிந்து செயல்படவும், மக்களைத் திரட்டவும், மக்களைப் பாதுகாக்கவும் யாரால் முடியுமோ அவனே உண்மையான தலைவனாவான்.