தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம்! விசாரணைகளில் வெளியான தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாரியளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களை இவர்கள் கருவியாக பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொடர் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இலங்கை பயங்கரவாத தாக்குதலை நடத்திய முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்து கோவையை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதல்தாரியுடன் சமூக வலைத்தளம் மூலம் ‌நண்பர்களாக இருந்ததும், தகவல்களை பரிமாறிக்கொண்டதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்தது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கருத்துகளை தமிழாக்கம் செய்து வீடியோ மற்றும் புகைப்படங்களாக இணையத்தில் பரப்பி வந்ததுடன், துண்டு பிரசுரங்களாக விநியோகித்து வந்ததாகவும், ஐஎஸ் இயக்கத்திற்கு இளைஞர்களை சேர்க்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தடை செய்யப்பட்டுள்ள சிமி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும், கோவையை மையமாக கொண்டு கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்களை விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதற்காக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களே இவர்களுக்கு கருவியாக பயன்பட்டு வருவதாகவும் விசாரணை நடத்திய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது” என அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளது.

Latest Offers