திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்! சர்வதேச அமைப்புகள் இரண்டு கடும் கண்டனம்

Report Print Ajith Ajith in சிறப்பு

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பு குறித்து சர்வதேச முன்னணி அமைப்புகள் இரண்டு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டு அமைப்புகளுமே இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளன.

திருகோணமலையில் வைத்து 2006 ஜனவரி 2ம் திகதி ஐந்து தமிழ் மாணவர்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கடந்த வாரம் நிறைவுக்கு வந்திருந்தது. குறித்த வழக்குடன் தொடர்புபட்டிருந்த 13 பேரை போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவித்து நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.

எனினும், இந்த தீர்ப்பு இலங்கையில் நீதி கிடைக்கவில்லை என்பதை முன்னிருத்துவதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது குறித்து சர்வதேச மன்னிப்பு சபையில் தென்னாசிய பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில்,

“ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை ஏற்றுக்கொண்டதன் படி இலங்கையில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஐநா பரிந்துரைகளை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும், இந்த ஐந்து மாணவர்களின் கொலையும் ஐநா பரிந்துரையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் கருத்து வெளியிடுகையில்,

“இந்த தீர்ப்பானது மிகவும் பாரதூரமானது. இலங்கையில் நீதிகிடைக்கவில்லை என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து 38 பேர் சாட்சியமாக அழைக்கப்பட்டிருந்த போதும், 9 பேர் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், அவர்கள் சாட்சியாக வரவில்லை.

ஆகையினால் அவர்களின் சாட்சிகள் பதியப்படவில்லை. இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை மிகவும் வருத்தத்திற்குரியது” என அவர் கூறியுள்ளார்.