விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேச்சு! வைகோவின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்

Report Print Murali Murali in சிறப்பு

தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தெரிவித்து தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஐந்தாம் திகதி தீர்ப்பளித்தது.

இந்நிலையில், குறித்த தீர்ப்பை இரத்து செய்யக்கோரி வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைகோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி “சுதந்திர இந்தியாவில் தேச துரோக வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்கு இது என்று கூறினார்.

அத்துடன், இந்த வழக்கை பொறுத்தவரை வைகோ பேச்சு தொடர்பான காணொளி அல்லது குரல் பதிவுகளை பொலிஸார் பறிமுதல் செய்யவில்லை. பொலிஸார் மட்டுமே அரசு தரப்பு சாட்சிகளாக சாட்சியளித்ததாக” கூறினார்.

அதே சமயம் அரசு தரப்பில் அரசு தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, “தனது பேச்சை வைகோவே ஒப்புக் கொண்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதால் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக இருந்தால், இந்த வழக்கு முடியும் வரை இது போன்ற பேச்சுக்களை அவர் பேச கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வைகோ விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும் பேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.