ஈன்றவனை பறிகொடுத்தவள், கண் எதிரே காணாமல் மாண்டாளோ! ஈழத் தாயின் துயர மரணம்

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு

“ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய் ”

வள்ளுவன் தொட்டுச் செல்லாதே இடமேயில்லை. தாய்க்கு மகன் செய்யும் செயல், தந்தைக்கு மகனாற்றும் கடமை, என்று எத்தனை விளக்கத்தை எடுத்தியம்பியிருக்கிறான் வள்ளுவன். அவன் சொன்னதில் எத்தனை உள்ளர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.

பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சிகளை, பாராட்டுக்களை அவர்களின் உயரங்களை கனவு கண்டு கொண்டிருப்பவர்கள், தன் மகனை சபையோர் சான்றோன் என்று பாராட்டும் போது கிடைக்கும் பேரானந்தமடையும் பெற்றோர்களின் மகிழ்வுக்கு எல்லைகள் இல்லை.

இஃது எல்லாப் பெற்றோர்களின் மனதிலும் ஆழப்பதிந்திருக்கும். அப்பிள்ளைகளின் வளர்ச்சிகளைக் காண காத்திருக்கும் அவர்களுக்கு பிள்ளைகளைக் காணவில்லை என்ற போது ஏற்படும் துயரம்? வார்த்தைகளால் வடிக்க முடியுமா?

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் நிலை யாதெனத் தெரியாதவர்கள் ஆயிரக் கணக்கில் இன்றும் தேடி வாடிக் கொண்டிருக்கிறார்கள். உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூட இன்னமும் தெரியாது அலையும் பெற்றவர்களின் பரிதாபம் ஆட்சிப் பீடத்திற்கும் அதிகாரத்தரப்புக்கும் தெரியாமல் இல்லை.

ஆனால், முடிவுகளை, அவர்களுக்கான தீர்வினை, நீதியினைப் பெற்றுக் கொடுப்பதில் காட்டும் ஆமை வேகத்தை இந்த அரசாங்கம் வேறெந்த வேலைகளிலும் காட்டியதில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், அதிகாரத்தை இறுகப்பிடித்துக் கொள்வதற்கும் மேற்கொள்கின்ற முயற்சிகளை எவ்விதம் அடைகிறார்கள் என்று?

வாக்களித்த மக்களின் நிலை என்ன? குடிமக்களின் நிலை தெரியா அரசும், மக்களின் துயர் தெரியாத பிரதிநிதிகளும் இருந்தென்ன லாபம் என்னும் விரக்தி நிலைக்கு வந்திருக்கிறார்கள் மக்கள்.

ஒருநாள் இரண்டு நாள் அல்ல, மகன் காணாமல் போன நாளிலிருந்து தேடியலைந்த பாதங்கள் இன்று ஓய்ந்துவிட்ட செய்தி எத்தனை துயரமானதாக ஈழத்தவர்களுக்கு மாறியிருக்கிறது.

ஆம், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்துப் தொடர் போராட்டங்களிலும் பங்கெடுத்து தனது மகனை கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி வந்த தாய் ஒருவர் இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்னும் செய்தி ரணமாக வந்திருக்கிறது.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மாவின் மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் காணாமலாக்கப்பட்டார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் இன்றையதினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார் அவர்.

கடந்த 2008,07.௦1 அன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைத்த நிலையில் இன்றுவரை அவர்குறித்த நிலைமைகள் எதனையும் அறியாத நிலையில் மரித்துவிட்டார்.

பிள்ளையின் வருகைக்காக அத்தாயார் நடத்தாத போராட்டங்கள் எத்தனை!. வெளிநாட்டுத் தூதுவர்கள், அரச அதிகாரிகள், ஜனாதிபதி, பிரதமர், தாங்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதிநிதிகள் என்று எவர் வந்தாலும் அவர்களை கூட்டாகச் சந்தித்து தங்கள் பிள்ளைகளின் நிலைகுறித்து கேட்டறிய ஆர்வம் காட்டும் பல பெற்றோர்களில் செபமாலைமுத்து திரேசம்மாவும் ஒருவர்.

கால்கடுக்க, வயிறு பசிக்க, உடல் மெலிந்து நீண்ட நாட்களாக போராட்ட களத்தில் இருந்த தாய் எத்தனை ஏக்கத்தோடும் தவிப்போடும் உயிரை விட்டிருப்பாள். மகன் வருவான், வயதான காலத்தில் அவன் நிழலில் ஒதுங்கியிருக்கலாம், அவன் பிள்ளைகளோடு விளையாடி கொஞ்சி மகிழ்ந்திருக்கலாம் என்று கூட அவள் கற்பனை செய்திருக்கலாம்.

ஆனால் அத்தனையும் பகல் கனவாக்கியிருக்கிறது அரசு. மகனும் வரவில்லை. வரவழைத்து கண்டுபிடித்து அரசும் கொடுக்கவில்லை. இறுதியில் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதேபோன்று, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவுகள் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை. இருக்கும் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்துப் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை கோரி போராடி வருகின்றனர்.

பிள்ளைகளைக் காணாது, வாடி வதங்கி உயிர்விடும் பெற்றோர்களின் சாபத்துக்கும், அவர்களின் ஏக்கத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரத் தரப்பும் என்ன பதிலைக் கொடுக்கப்போகிறது? மீண்டும் மௌனம் எனில்,

“ அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை”

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். என்று வள்ளுவன் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை ஓர் நாள் அவர்களின் துன்பக் கண்ணீர் சுட்டெரிக்கும். கொல்லும். அதுவரை பொறுத்திருந்து அதிகார நாற்காலியை தேய்த்துவிட்டு போவேன் எனில், அதுவே உங்களுக்காக சாபக்கேடு.....