சிங்கள பேரினவாதிகளின் அட்டகாசம்! மைத்திரிக்கு எதிராக குற்றச்சாட்டு

Report Print Murali Murali in சிறப்பு

ஏனைய மதத்தினர் மீது சிங்கள பேரினவாதிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய கவனம் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மெத்தோடிஸ்த சபையின் பேராயர் ஆசிரி பி.பெரேரா ஆண்டகை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மஹியங்கணை பகுதியிலுள்ள மெதடிஸ்த திருச்சபைக்குள் புகுந்து பௌத்த பிக்குமார்கள் நடத்திய தாக்குதல் தொடர்பில் வினவியபோதே பேராயர் இவ்வாறு கூறியுள்ளார்.

மஹியங்கனை மெத்தடிஸ்த திருச்சபைக்குள் கடந்த 4ம் திகதி நுழைந்த மூன்று பௌத்த பிக்குகள் அந்த சபையின் ஊழியம் செய்யும் நபர் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை மெத்மோடிஸ்த திருச்சபையின் பேராயர் ஆசிரி பி. பெரேரா கருத்து வெளியிடுகையில்,

“மகாநாயக்க தேரர்களை சந்தித்து இதுகுறித்து கவனத்தை திருப்பமுடியும். ஆனால் இப்போது அல்ல. பொலிஸார் விசாரணை செய்து சரியான தகவல் வழங்க வேண்டும்.

மொறயாய என்பது தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அண்மித்த விகாரையாகும். அந்த விகாரையின் தலைமை பிக்கு எமது மதச் செயற்பாட்டிற்கு எதிராக ஒருபோதும் நடந்துகொள்ளவில்லை. எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஏனைய விகாரைகளைச் சேர்ந்த பிக்குகள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து பொலிஸாரே தேடியறிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

நிச்சயமாக எமக்கு தெளிவான தகவல் பொலிஸாரிடம் இருந்து கிடைக்காவிட்டல் மகாநாயக்க தேரர்களை சந்தித்து இதுகுறித்து தெளிவுபடுத்த நேரிடும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.