திகாவின் வீடுகள் தரம்வாய்ந்ததா? இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை

Report Print Gokulan Gokulan in சிறப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு மக்கள் இணைந்து ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென அருணலு மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளருமான மருத்துவர் கிரிஷான் ராஜசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.

குறிப்பாக மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, குளவித்தாக்குதல், கல்வித்துறை வீழ்ச்சி, சுகாதாரப் பிரச்சினைகள் என்பன தொடர்ந்தும் வரலாற்றுக்காலமாக இருந்து வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் கவனத்திற்கு நேரடியாக சென்று கொண்டுவந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மலையக மக்களுக்கு மலைநாட்டு வீடமைப்பு அமைச்சினால் கட்டிக்கொடுக்கப்படுகின்ற வீடுகள் உரிய தரத்தில் இருக்கின்றதா என்பது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மருத்துவர் கிரிஷான் ராஜசுந்தரம், அண்மையில் பதுளை பிரதேசத்தில் இவ்வாறு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றில் அள்ளுண்டுசென்றதை சுட்டிக்காட்டினார்.

ஆகவே இந்திய அரசாங்கம் இதுகுறித்து முழுமையான கவனத்தை செலுத்தி, இந்த வீடமைப்புத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அறிவதற்காக கண்காணிப்புக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மலையகப் பெருந்தோட்டத்தில் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில், அங்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் 25 சதவீதமான மக்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்படும் அபாயம் அண்மையில் நடத்தப்பட்ட கணிப்பீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்த நேர்காணலில் அம்பலப்படுத்தினார்.