அழகுக்கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை தன்வசப்படுத்திய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

Report Print Gokulan Gokulan in சிறப்பு

சர்வதேச அழகுக்கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை தன்வசப்படுத்திய இலங்கை அணி அமோக வரவேற்புக்கு மத்தியில் தாயகம் வந்தடைந்துள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த இந்த குழுவிற்கு, அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சர்வதேச அழகுக்கலை போட்டியில் ஆசிய வலயத்துக்கான கிண்ணத்தை கடந்த 16ஆம் திகதி பெரிஸில் நடைபெற்ற சர்வதேச அழகுக்கலை முக ஒப்பனை போட்டியிலேயே இலங்கை தன்வசப்படுத்தியது.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று போட்டியாளர்கள், இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.

கயல்விழி, மயூரி மற்றும் தீக்ஸினி ஆகியோரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர்.

மூன்று போட்டியாளர்களில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்திருந்தமை விசேட அம்சமாகும்.

கொழும்பைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான கயல்விழி ஜெயபிரகாஷ் என்பவரே இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் யுவதியாவார்.

மாத்தறையைச் சேர்ந்த மயூரி மற்றும் காலியைச் சேர்ந்த தீக்ஸினி ஆகியோரும் இந்த போட்டியில் பங்குப்பற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஓ.எம்.சி சிகை அலங்கார உலகக் கிண்ணம் 2019 பெரிஸில் கடந்த 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளது.

இந்த போட்டிக்காக சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.