தடுப்பு காவலில் இருக்கும் இலங்கை தமிழ் அகதி குடும்பம்! ஐநாவின் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்திரேலியா

Report Print Murali Murali in சிறப்பு

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரியா – நடேஷலிங்கம் குடும்பத்தை விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை விடுத்த கோரிக்கையினை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் கடந்த ஒரு மாத காலமாக கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள, அதேவேளை, நாட்டில் தங்குவதற்கான நீதிப்போராட்டமும் தொடர்கின்றது.

இலங்கையைச் சேர்ந்த கோகிலபத்ம பிரியா நடேசலிங்கம் மற்றும் நடேசலிங்கம் முருகப்பன் ஆகியோர் புகலிடம் கோரி 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர், அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அவர்களது குழந்தைகளான கோபிகா மற்றும் தருனிகா ஆகிய இருவரும் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்களாவர். இந்நிலையில், குறித்த தமிழ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குடும்பத்தினர் நாடு கடத்தலுக்கு எதிராக போராடிவருகின்ற பின்னணியில், அவர்களை எதிர்வரும் 30 நாட்களுக்குள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவித்து, சமூகத்தில் வாழ அனுமதிக்குமாறு ஐநா கோரிக்கை விடுத்திருந்தது

அவ்வாறு கிறிஸ்மஸ் தீவிலிருந்து விடுவிக்கப்படும் பட்சத்தில், அவர்கள் அங்கிருந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் ஐநா மனித உரிமை ஆணைக்குழு கோரியிருந்தது.

பிரியா – நடேஷலிங்கம் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி கரீனா போர்ட்ஸ், ஐநாவின் தலையீட்டை கோரி அனுப்பி வைத்த கடிதத்திற்கு, ஐநாவினால் அனுப்பி வைக்கப்பட்ட பதில் கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கையினை அவுஸ்திரேலியா நிராகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.