மகாநாயக்க தேரர்களிடம் நேரில் ஆசிபெற்றார் சஜித்

Report Print Rakesh in சிறப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இன்று காலை 8 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாஸ, அங்கு இடம்பெற்ற பௌத்தமத அனுஷ்டானங்களில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா விகாரைகளுக்குச் சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றுக்கொண்டார். அத்தோடு ராமஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து சஜித் பிரேமதாஸ ஆசிபெற்றார்.

மேலும் மீரா மக்கம் முஸ்லிம் பள்ளிவாசலில் மதவழிபாட்டில் கலந்துகொண்ட அவர், கிறிஸ்தவ மதத்தலைவரான வியன் பர்னாந்துவை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டதுடன் கடுகலே ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.