இலங்கை தமிழ் அகதி குடும்பத்திற்காக பெருமளவு நிதியை செலவிடுகின்றதா அவுஸ்திரேலிய அரசு?

Report Print Murali Murali in சிறப்பு

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த முகாமை மீளத்திறப்பதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் சுமார் 27 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் தற்போது பிரியா-நடேஸ் தம்பதி மற்றும் அவர்களது இரு மகள்கள் ஆகிய நால்வர் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரைத் தங்கவைப்பதற்கு அரசாங்கம் இந்தளவு பணம் செலவிட வேண்டுமா என செனற் விசாரணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்துள்ள உள்துறை அமைச்சு,

“குறித்த முகாமில் சுமார் 100 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் பிரியா-நடேஸ் குடும்பத்தை தடுத்து வைப்பதற்கென இம்முகாம் மீண்டும் திறக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

அத்துடன், கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக கொண்டுவரப்படும் அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்படும் நோக்கிலேயே இது மீளதிறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி திறக்கப்பட்ட கிறிஸ்மஸ் தீவு முகாமை நிர்வகிப்பதற்கென ஆகஸ்ட் 31ம் திகதி வரை சுமார் 26.8 மில்லியன் டொலர்களை அரசு செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தடுப்புமுகாமில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள 100 பேரும் எத்தனை நாட்கள் அங்கு இருப்பார்கள் என்ற கேள்விக்கான பதில் தற்போது தம்வசம் இல்லை என உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.