கனடாவில் இடம்பெற்ற மின்னல் செந்தில் குமரனின் நிகழ்ச்சி

Report Print Gokulan Gokulan in சிறப்பு

மின்னல் செந்தில் குமரன் என்றாலே மக்கள் தொடர்புபடுத்துவது உயிர்காக்கும் சத்திர சிகிச்சைகளை பொறுப்பெடுத்து, நிதி திரட்டி உயிர்களை காப்பாற்றி முடிப்பவர் என்று.

அவர் இதுவரை அப்படி 56 உயிர்களை தக்க வைத்தவர் என்பதினை இங்கு குறிப்பிட வேண்டும்.

உயிர்காக்கும் நோக்கத்தோடு சென்ற வெள்ளிக்கிழமை மாலை கனடா ஸ்கார்ப்ரொ நகரத்தில் நடைபெற்ற MGR 102 இன்னிசை மாலை மனங்களை குளிர செய்ததோடு நில்லாமல் நெகிழவும் செய்தது.

நிகழ்வு தொடங்கி பொழுது முதல் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது.

சரியாக இரவு 11.15 மணிக்கு நிகழ்ச்சி முடிவுற்றது என்று செந்தில்குமரன் சொன்ன போதும் மக்கள் கதிரைகளை விட்டு எழும்பாமல் இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை தந்த ஒரு விஷயம்.

அவர்களில் பலர் “இவ்வளவு திறமையான எங்கட கலைஞர்கள் இருக்கும் போது, ஏன் வெளியில இருந்து கொண்டு வரவேணும்" என்று பேசி கொண்டது காதுபட கேட்கக் கூடியதாக இருந்தது.

குறிப்பாக செந்தில்குமரன் மக்கள் திலகம் MGR ஐ நினைவுபடுத்தும் விதத்தில் பல வண்ண உடைகளை அணிந்து பாடி ஆடி மக்களை பரவசத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது அவருக்குள் இவ்வளவு திறமையா என்று வியக்க வைத்தது.

அதிலும் அவர் ஒரு பத்து நிமிடத்தில் பல பாடகர்களின் குரலில் தனித்து குரலை மாற்றி பாடி காட்டிய விதம் அருமையோ அருமை.

நிகழ்ச்சியை இன்னும் மெருகூட்டியது ஒலி - ஒளி அதனுடன் மேடை அமைப்பு. பாடல்கள் பாடும் பொழுது பெரிய டிஜிட்டல் திரையில் அந்த படத்தின் பாடல் காட்சிகள் ஒலிபரப்பு செய்தது பழைய நினைவுகளை மீட்டு மனங்களை இதமாக்கியது.

சிபோதனின் ஷியானாஸ் இசை கலைஞர்கள் பட்டையை கிளப்பினர். பாடிய அத்தனை கலைஞர்களையும் என்னவென்று சொல்லி புகழ்வது என்று தெரியவில்லை!

இவ்வளவு திறமை எம் சமூகத்து பிள்ளைகளிடம் இருக்கிறதா என்று வியப்பின் உச்சிக்கே சென்றது மக்களின் எண்ணம்.

நிகழ்வின் இன்னொரு முக்கிய அம்சம் அங்கு அமைக்கப்பட்டிருந்த கோவில் மணி!

கிளிநொச்சி மாவட்டடைச் சேர்ந்த பெண் ஒருவரின் இருதய மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற ஒரு காணொளியும், அதே சிகிச்சையினை வேண்டி நிற்கும் இன்னொரு பெண்ணின் தந்தையின் காணொளியும் ஒளியிடப்பட்டது.

அங்கு உதவி கேட்டு நிற்கும் உள்ளங்களின் ரணங்களை அது வெளிச்சமிட்டு காட்டியது.

அதன் முடிவில் செந்தில்குமரன் $500 4 தர விரும்பும் கொடையாளிகள் கட்டியிருந்த மணியினை அடிக்கும்படி வேண்டுகோள் விடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் “உந்தன் தேசத்தின் குரல்” என்ற பாடலை பாடியது மக்களின் மனங்களை உருக்கியது.

அந்த பாடலை பாடிய போது, திரையில் அவர் வடக்கு மற்றும் கிழக்கிற்கு பயணம் செய்த போது வழங்கிய வாழ்வாதாரங்கள், சந்திப்புக்கள், பயனாளிகளின் புகைப்படங்கள் ஒளியிடப்பட, பலர் கட்டியிருந்த கோவில் மணியினை நோக்கி நகர்ந்தனர்.

மணி அடித்தப்படியே இருக்க குளிர்ந்த மனங்கள். ஒவ்வொரு மணி ஓசையும் ஒரு உயிரினை தக்க வைக்க பயன்பட போகின்றதென்பதனையிட்டு மக்களுக்கு மகிழ்ச்சி.

என் துணைவியாரும் சைகை காட்ட நான் மணியினை என் சார்பாக அனைவருக்கும் தெரிந்த (Oh Yeahhhh) வை அடிக்க சொன்னேன்.

ஒரு கொஞ்ச நேரத்தில் $21,000 மேலதிகமாக, அன்று மொத்தமாக $57,000 தாண்டியது சேர்ந்த நிதி தொகை.

இன்னும் வரவேண்டியது உள்ளது என்றும் தான் சேர்ந்த முழு தொகையும் விரைவில் அறிவிப்பேன் என்று கூறினார் செந்தில் குமரன்!

தெள்ளத் தெளிவான தானம் தந்தோர் விவரங்கள், யாருக்கு அனுப்பப்பட்டது என்ற விவரங்கள் என்பதோடு மட்டுமில்லாமல் எல்லா செலவுகளையும் தான் ஏற்றுக் கொண்டு, சேர்ந்த முழு நிதியையும் இப்படி நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தும் செந்தில் குமரன் ஒரு கலங்கரை விளக்கம் மட்டுமல்ல, நிதி சேர்க்கும் அமைப்புகளுக்கு ஒரு முன்னுதாரணம்!

கடுமையான இந்த சத்திர சிகிச்சைகளை ஊழியம் ஏதும் பெறாமல் செய்து கொண்டிருக்கும் தலைமை சத்திர சிகிச்சை நிபுணர் காந்திஜி, அவருடன் பணி புரியும் மருத்துவர்கள், அதனோடு மிக குறைவான கட்டணத்தை அறவிடும் லங்கா வைத்தியசாலை ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்தார் செந்தில் குமரன்.

அவர்கள் உண்மையில் போற்றப்பட வேண்டும். அதனோடு “பல்லாயிரக்கணக்கான மனித வடிவில் இருக்கும் தெய்வங்களுடன் பழகும் பாக்கியத்தை பெற்றேன்” என்று செந்தில் குமரன் தனது பேச்சினில் போது கூறிய மக்களை குறிப்பிட்டார்.

அப்படி குறிப்பிட்டு சொன்ற ஒரு நபர் குவாலிட்டி பேக்கரி உரிமையாளர் பிரான்சிஸ்.

தேவை இல்லாது பேச்சுகள் இல்லை, பொன்னாடைகள் இல்லை, அரசியல்வாதிகள் இல்லை, சான்றிதழ்கள் இல்லை.

நேர்த்தியாகவும், தரமானதாகவும் ஒரு இசை நிகழ்வினை கொடுத்ததோடு மட்டும் நில்லாமல் பன்னிரெண்டு உயிர்களையும் இதன் மூலம் காப்பாற்ற செந்தில்குமரன் தன்னுடன் ஆயிரக்கணக்கான உறவுகளை இணைத்து கொண்டது உண்மையில் மனதார போற்றப்பட வேண்டிய விஷயம்.

அன்று வருகை தந்தவர்கள் அனைவரும் பாடல்களை பார்க்க மட்டும் வரவில்லை, மாறாக பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இதயத்தின் துடிப்பு தொடர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வருகை தந்திருந்தனர்.

ஒரு நன்கொடை நிகழ்விற்கு, அதுவும் உள்ளூர் கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்விற்கு இவ்வளவு பேர் ஒரு வேலை நாள் மாலையில் சமூகமளித்து பல செய்திகளை மக்களுக்கு சொல்லும்படியாக இருந்தது.

அதாவது சரியான தேவையும், தெளிவான கணக்குகளும் காட்டுபவர்களுக்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு என்பது.

“நினைத்ததை முடிப்பவன்” இன்றும் எம்முடன் வாழ்கிறார் செந்திலின் உருவத்தில்!