முதலாவது மாவீரர் நிகழ்வு!

Report Print Mohan Mohan in சிறப்பு

1989ம் ஆண்டு தொடக்கம் மாவீரர் தினம் எனும் பெயருடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறும் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது.

இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் முல்லைத்தீவு மணலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரை இடம்பெறும்.

வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால் மாவீரர் தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அந்த வருடத்தின் மாவீரர்களின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலை புலிகள் உத்தியோக பூர்வமாக வெளியிடுவார்கள்.

உரிமைகோர முடியாத தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை அவர்கள் இந்த எண்ணிக்கையோடு இணைப்பதில்லை. அது தமிழீழ விடுதலைப் புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது.

மாவீரர் வாரத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2008ம் ஆண்டு மாவீரர் தினமே தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர்தினமாகும்.

அந்த வருடத்தின் அக்டோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர்.

2009 மே 19ம் தேதி வரையான போரின் இறுதிநாள் வரை சுமார் 40,000க்கும் அதிகமான போராளிகள் வீரச்சாவு அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

2009 போர் முடிந்த பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதை தடுக்க இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. போரின் பின்னர் இலங்கை இராணுவத்தினரால் மாவீரர்களின் கல்லறைகளும் நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன.

'மாவீரர் துயிலும் இல்லங்கள்' இருந்த இடங்களை அழித்துவிட்டு அதில் இராணுவ முகாம்களை அமைத்தனர். எனினும் பல்வேறு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாளினை அனுசரிக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்று இருக்கின்றார்.

இந்நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் இம்முறை மாவீரர் நாளை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.