சுவிஸ் தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை! மகிந்தவின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு

Report Print Murali Murali in சிறப்பு

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி அச்சுறுத்தப்பட்டமை குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள அந்நாட்டுத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுவிஸ் தூதரகம் முறையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் மகிந்த இன்று மாலை முன்வைத்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்று இரவு பதிலளித்துள்ள கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம், விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவருவதாக தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுவிஸ் தூதரகம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தற்போதைய உடல்நிலையானது, விசாரணைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பம் தொடர்பில் கரிசனை கொள்வதாக” அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்கு அடைக்கலம் கோரி சென்றதாக முன்வைக்கப்படும் தகவல்கள் குறித்து சுவிஸ் தூதரகம் பதிலளித்துள்ளது.

இதற்கமைய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா அப்படியொரு எந்த கோரிக்கையையும் தங்களுக்கு முன்வைக்கவில்லை என்று அந்த தூதரகம் தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது.