சூடானில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் 23 பேர் பலியானதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் அந்த தொழிற்சாலை முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த இந்தியர்கள் சிலர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பணிப்புரிந்த தமிழர்கள் மூவரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளன.
இந்திய தூதரக தகவல்களின் அடிப்படையில், அங்கு பணியாற்றிய மூன்று தமிழர்களை காணவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணன், வெங்கடாசலம் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கு பிறகு அவர்களின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை.
ஜெயக்குமார் என்பவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. முகமது சலீம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.