இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? இந்திய நாடாளுமன்றில் பா.சிதம்பரம் சரமாரியாக கேள்வி

Report Print Murali Murali in சிறப்பு

குடியுரிமை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.

“நம்முடைய நாட்டில் ஏற்கெனவே குடியுரிமைச் சட்டம் உள்ளது. அது பிறப்பு, பதிவு, இயல்புத்தன்மை உள்ளிட்ட தன்மைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுதான் உலக அளவில் பின்பற்றப்படும் நடைமுறை.

ஆனால், தற்போது இந்த அரசு தன்னிச்சையாக தானே முடிவு செய்யும் முறையை அமல்படுத்துகிறது. யாராவது இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க பொறுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மசோதா தொடர்பாக சட்டத்துறையின் கருத்தை அரசால் தெரிவிக்க முடியுமா? எதற்காக இந்த மசோதாவில் அகமதியாஸ் மற்றும் ஹசாராஸ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை?

இந்தச் சட்டத்தின் கீழ் யார் பயனடைவார்கள்? அவர்களுடைய மத அடையாளத்தின் அடிப்படையில்தான், வேறு எந்த அடிப்படையிலும் அவர்கள் பயனடைவார்களா?

தன்னளவிலேயே சட்டத்தை சீர்செய்வதாக இந்த அரசு நினைத்துக்கொள்கிறது. இந்த மசோதா ஒரு நயவஞ்சக மசோதா. உதாரணமாக பூடானைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், இலங்கையைச் சேர்ந்த இந்துக்களை ஏன் பாதிக்கப்படும் சிறுபான்மையினராக கணக்கில் கொள்ளவில்லை.

இந்தச் சட்டத்துக்கு கண்டிப்பாக நீதிமன்றம் தடை விதிக்கும். நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அரசிலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மசோதாவை நிறைவேற்ற வேண்டியது நம்முடைய பொறுப்பு.

எனினும், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லவைக்கிறீர்கள். இந்த மசோதா சட்டப்படி சரியா? தவறா? என்று நீதிமன்றம் முடிவு செய்வது நாடாளுமன்றத்தின் மீது விழும் அடி. இது மோசமானது.

அத்துடன், மத அடிப்படையில் மட்டும் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டிய ப.சிதம்பரம், அரசியல், மொழி அடிப்படையில் குடியுரிமை திருத்த மசோதா பின்பற்றப்படாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

சட்டத்துறை அமைச்சகம் அல்லது அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசித்து தான், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதா? என்றும், இதற்கு யார் தான் பொறுப்பேற்றுக் கொள்வது” என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.

Latest Offers

loading...