நியூசிலாந்தை நோக்கி படகு வழி ஆட்கடத்தல்?

Report Print Murali Murali in சிறப்பு

அவுஸ்திரேலியா அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்றச் சட்ட நீக்கத்தில் ஆளும் லிபரல் கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க சுதந்திர மேலவை உறுப்பினர் ஜக்யூ லம்பீயுடன் எந்த உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை என உறுதி செய்திருக்கிறார் அவுஸ்திரேலிய நிதித்துறை அமைச்சர் மேதியஸ் கார்மன்.

முன்னதாக, இச்சட்ட நீக்கத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு நிபந்தனை உள்ளதாகவும் அதனை ஆளும் லிபரல் கூட்டணி அரசிடம் தெரிவித்திருப்பதாகவும் கூறிவந்தார் அவுஸ்திரேலிய மேலவை உறுப்பினர் ஜக்யூ லம்பீ.

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நியூசிலாந்தின் சலுகையை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரின் நிபந்தனை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இவ்விவாகரத்தை வெளிப்படையாக விவாதிக்க விரும்பவில்லை எனக் கூறியிருந்தார் ஜக்யூ லம்பீ.

நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட தீவு நாடுகளில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவர அனுமதிக்கும் மருத்துவ வெளியேற்றச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது.

இந்த சூழலில், கடந்த ஆறு ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் ‘கடல் கடந்த முகாம்களில் உள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நியூசிலாந்தின் சலுகை’, இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்திருந்தது.

இது குறித்து அவுஸ்திரேலிய ஊடகத்திடம் கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்,

“இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் வரக்கூடிய அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருந்துகொண்டு தான் இருக்கிறது. தற்போது, ஆட்கடத்தல்காரர்கள் நியூசிலாந்துக்கு அழைத்து செல்வதாக கூறி வருகிறார்கள்,” எனத் தெரிவித்திருக்கிறார்.

“நவுரு அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் ‘அமெரிக்காவுக்கு வர வேண்டாம்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வழங்கப்படும் அரசின் உதவிகளுக்கு இணையாக அமெரிக்காவில் உதவிகள் வழங்கப்படுவதில்லை’ என முகாமில் உள்ளவர்களுக்கு தகவல் அனுப்புவதை அறிந்திருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார் பீட்டர் டட்டன்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்த வழிவகை செய்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

Latest Offers