விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! மலேசியா நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

Report Print Murali Murali in சிறப்பு

மலேசியாவில், விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை தொடர்பான மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அந்நாட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்தது பேசியதாக குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உட்பட 11 பேர் மலேசியாவில் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த பிணை மனுவையே எதிர்வரும் திங்கட்கிழமை (16) விசாரிக்க மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரின் விண்ணப்பங்கள் டிசம்பர் 4ம் திகதியும், மற்றொருவர் டிசம்பர் 9ம் திகதியும் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஜி.சாமிநாதன், பி.குணசேகரன் மற்றும் எஸ்.சந்துரு ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.

எனினும், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பிணை விண்ணப்பங்கள் கிடைத்ததாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் அறிவித்ததை அடுத்து டிசம்பர் 16ம் திகதி வழக்கு விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

இதேவேளை கடந்த நவம்பர் 29ம் திகதி, பாதுகாப்பு குற்றங்கள், (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 பிரிவு 13 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்பதால் சாமிநாதனை பிணை விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோலாலம்பூர் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தார்.

மேலும் கடந்த மாதம் 6ம் திகதி, விடுதலை புலிகள் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக குணசேகரன் மீது முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய அரசு தரப்பு விண்ணப்பதிற்கு செரம்பன் அமர்வு நீதிமன்றம் அனுமதித்தது.

அத்தோடு மேல் நீதிமன்றத்தில் பிணை தொடர்பான அரசியலமைப்பு பிரச்சினையை குறிப்பிட சமினாதன் மற்றும் 11 பேரின் பிணை விண்ணப்பத்தையும் பரிசீலிக்க நீதிமன்றம் அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.