சுவிஸ் தூதரக பெண்ணிடம் 08 மணிநேர விசாரணை!

Report Print Murali Murali in சிறப்பு

வெள்ளைவானில் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் நான்காவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்றைய தினம் முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் மனநிலை தொடர்பாக விசேட மருத்துவர் நிபுணர் குழு முன்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ம் திகதி கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் துரித விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வகையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 09ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முதன்முறையாக சம்பந்தப்பட்ட தூதரகப் பெண் முன்னிலையாகினார்.

அவரிடம் 08 மணிநேர விசாரணையை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மறுபடியும் 10ம், 11ம் திகதிகளில் அவரை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் இதுகுறித்த வழக்கு விசாரணையில், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் பணியாளரை மனநிலை மருத்துவ நிபுணர்கள் குழு முன்பாக முன்னிலைப்படுத்தி விசாரணை செய்வதற்கான உத்தரவை வழங்கியது.

அதற்கமைய விசாரணையில் முன்னிலையாவதற்காக சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் இன்றைய தினம் நண்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகினார்.

இதேவேளை கடந்த தவணையில் இடம்பெற்ற விசாரணையின்போது, குறித்த பெண் பணியாளர் வெளிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் 17ம் திகதி வரை கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.