ஏப்ரல் தீவிரவாத தாக்குதல்! விரைவில் ரணில், மைத்திரியிடம் விசாரணை

Report Print Murali Murali in சிறப்பு

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலான வழக்கு விசாரணையில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் இதனைத் தெரியப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதியான உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன். 500 பேர்வரை காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையை ஏற்கனவே பலதடவை இந்தியா உட்பட சில வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவுகள் இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தன.

எனினும் அந்த அறிவுறுத்தலை ரணில்-மைத்திரி தலைமையிலான அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவும் உதாசீனப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில் சம்பவம் இடம்பெற்றபோது பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபரான பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் முற்பகலில் அவர்கள் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணையின்போது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையாகியிருந்த பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ், இதுவரை 12 பேரிடம் இதுகுறித்த வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோரிடமும் வாக்குமூலத்தை விரைவில் பெறவுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

Latest Offers

loading...