நிறைவடையப்போகும் 2019ஆம் ஆண்டு! தடம்பதித்த நினைவுகளின் தடயம்..

Report Print Jeslin Jeslin in சிறப்பு

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை நாங்கள் உடனுக்குடன் செய்திகளாக உங்களுக்குத் தந்திருந்தோம்.

இந்த நிலையில், இவ்வருடத்தின் இறுதியை வந்தடைந்துள்ள நாம் இவ்வருடத்தில் இடம்பெற்ற, அதிகம் மக்களின் கவனத்தை ஈர்த்த செய்திகள் தொடர்பில் பார்க்கலாம்,

01 இலங்கையின் பிரபல பாதாள உலகக்குழு தலைவர் டுபாயில் கைது!

இலங்கையில், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் டுபாயில் கைது செய்யப்பட்டார்.

பெப்ரவரி ஐந்தாம் திகதி இவர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களின் பின்னர் இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

02 இலங்கையின் தமிழர் பகுதியைச் சேர்ந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த பெரும் சோகம்!

மஹியங்கனை - பதுளை வீதியில், ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் இரட்டை பெண் பிள்ளைகள் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், குடும்பத்துடன் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மீண்டும் திரும்போது குறித்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதுடன் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த இலங்கையர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

03 உலகத்தையே உலுக்கிய இலங்கையின் ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில், ஏப்ரல் 21ஆம் திகதி காலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈஸ்டர் தினமான அன்று காலை பெரும்பாலான கிறிஸ்தவ மக்கள் தேவாலயத்தில் ஒன்றுகூடியிருந்த வேளை குறித்த குண்டுத் தாக்குதல் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.

அது மாத்திரம் அல்லாமல் நாட்டில் மேலும் ஏழு பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் மொத்தம் 253 பேர் உயிரிழந்ததுடன், 500இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இவர்களுள் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

04 கல்முனையில் தற்கொலைதாரிகள் சுட்டுக்கொலை

கல்முனை, சம்மாந்துறை பகுதியில் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 25ஆம் திகதி குறித்த பகுதியில் பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது இவர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இதன்போது மூன்று தற்கொலை குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. பொலிஸாரின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத ஆயுதாரிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.


05 உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை அளிக்கப்பட்டவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு!

வெசாக் தினத்தை முன்னிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுவதியொருவரை கொடூரமாக படுகொலை செய்த குற்றச்சாட்டில் உச்சநீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இராஜகிரிய ரோயல் பார்க் மாடிக்குடியிருப்பின் படிக்கட்டில் வைத்து இவோன் ஜோன்சன் என்ற யுவதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஜுட் சர்மந்த என்பவர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பொது மன்னிப்பு வழங்கியதுடன் பின்னாட்களில் அவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.

06 யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து ஜூலை மாதம் 28ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் - கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி(வயது 51), அஜந்தன் கோபிகா(வயது 30), செல்வரஞ்சன் பிமிநாத்(வயது 12) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து வந்தவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தனியார் அதிசொகுசு பேருந்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து அவர்களை அழைத்துச் சென்ற உறவுகளும் இந்த விபத்தில் சிக்கியிருந்தனர்.

07 இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமனம்

இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி காலை தனது நியமன கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பலவற்றிற்கு முகம்கொடுத்துள்ள சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு சர்வதேச அரசியல் தரப்பு மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தன.


08 யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்! தமிழ் விமானிகளின் முதல் பயணம்

யாழ்ப்பாணம் - பலாலி சர்வதேச விமான நிலையம் ஒக்டோபர் 17ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

36 வருடங்களின் பின்னர் மீண்டும் பலாலி விமான நிலையம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து முதலாவது விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.


09 உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சுர்ஜித் தொடர்பில் வெளியான இறுதி அறிவிப்பு!

தமிழகம், திருச்சி - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 25ஆம் திகதி குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நான்கு நாட்களாக பல்வேறு முயற்சிகள் மற்றும் உலகத்தவரின் பிரார்த்தனைகள் அனைத்தும் பலனளிக்காமல் குழந்தை சுர்ஜித் உயிரிழந்தமை ஒட்டுமொத்த உலகத்தினரையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


10 பலத்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் அமோக வெற்றியை தழுவினார் கோட்டாபய

பலத்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார்.

நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டியதாக 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அனைத்து தேர்தல் தொகுதிகளினதும் வாக்கு முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்ட நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவே வெற்றியாளர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

11 திருமணமான உலக அழகியாக இலங்கை பெண் தெரிவு

திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.

கொழும்பைச் சேர்ந்த கெரோலினி உலக அழகியாக டிசம்பர் மாதம் 7ஆம் திகதி அறிவிக்கப்பட்டார்.

35 வருடங்களின் பின்னர் இலங்கையை சேர்ந்த ஒருவர் இந்த பட்டத்தை வென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

1984ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்ட தற்போதைய கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க இலங்கை சார்பில் அழகியாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.